17 ஆண்டுகளாக தங்களிடம் பாசம் காட்டிப் பழகிய குரங்கு, நாய் கடித்து இறந்ததால், சோகத்துக்குள்ளான ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து குரங்கை உரிய முறைப்படி அடக்கம் செய்து, அதற்கு கோயில் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு எம்கே நகர் பகுதியில், குரங்கு ஒன்று சுற்றித் திரிந்து வந்தது. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் குரங்கு அப்பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்ததால், எல்லோரிடம் நன்கு அறிமுகமாகி நெருக்கம் காட்டியது. இடையிடையே பல்வேறு விதமாக இடையூறு கொடுத்த நிலையில், வனத் துறை அதிகாரிகள் மூலம் அக்குரங்கை பிடித்து வெகுதொலைவில் கொண்டு விட்டு விட்டு வந்தனர்.
ஆனால், அந்தக் குரங்கு எப்படியோ வழி கண்டுபிடித்து திரும்பவும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தது. சில மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் வனத் துறை மூலம் குரங்கை பிடித்துக் கொண்டு போய்விட்டனர். முன்பு போலவே திரும்பவும் ஊருக்கு திரும்பி வந்துவிட்டது. வந்து பழையபடி மக்களிடம் பாசத்துடன் பழகி வந்தது. மக்களும் அதே பாசத்துடன் அதற்கு தேவையான உணவுகளை வழங்கி வந்ததால், இந்தக் குரங்கு இந்த கிராமத்துக்கு செல்லக் குரங்காக மாறியது.
இந்நிலையில் இந்த குரங்குக்கு வயது முதிர்வு ஏற்பட்டதால், பற்கள் கொட்டி உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு சோர்வுடன் சுற்றித் திரிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் வயது முதிர்ந்த இந்தக் குரங்கை கடித்துக் குதறிவிட்டன. இதனால் உடலில் காயம் ஏற்பட்ட குரங்கு, கீழே வராமல் மரங்களிலும் வீடுகளின் மேலேயே தங்கி வந்தது.
காயம் மற்றும் முதுமை காரணமாக நேற்று முன்தினம் குரங்கு இறந்தது. இதனால் கிராம மக்கள் பெரும் சோகத்தை அடைந்தனர். மேலும் வீட்டில் ஒருவர் இறந்தது போன்று அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் துக்கம் அனுசரித்தனர். இதையடுத்து, சிறப்பு வாய்ந்த சிவாச்சாரியார்களை வரவழைத்து, குரங்குக்கு இறுதிச் சடங்குகள் செய்து முறையாக நல்லடக்கம் செய்தனர்.
இந்நிலையில் தங்களிடம் பாசம் காட்டிப் பழகிய குரங்குக்கு, அதைப் புதைத்த இடத்தில் கோயில் கட்ட தீர்மானித்தனர். இன்று அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. முறைப்படி பூமி பூஜை செய்யப்பட்டது.
இதுகுறித்து பேசிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வீரையன், “சுமார் 17 வருடங்களுக்கு மேலாக இதேபகுதியில் தங்கியிருந்த இந்தக் குரங்கு மக்களிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தது. ஒவ்வொரு வீட்டிலும் உறவினர்போல அக்குரங்கு பழகியது. குரங்கு இறந்ததைத் தங்கள் வீட்டில் நடந்த துக்கமாக கிராமத்தினர் கருதுகிறோம். குரங்கை அடக்கம் செய்த இடத்தில் கோயில் கட்ட தீர்மானித்து, இப்போது பூமி பூஜை செய்துள்ளோம். இங்கு கோயில் கட்டி வழிபடுவோம்” என்றார்.