சாகித்ய அகாடமியின் 2024-ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருதுக்கு யூமா வாசுகி தேர்வு: லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது


சென்னை: சாகித்ய அகாடமியின் 2024-ம்ஆண்டின் ‘பால புரஸ்கார்’ விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகி, ‘யுவ புரஸ்கார்’ விருதுக்கு இளம் எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கிலம் மற்றும் 23 இந்திய மொழிகள் உட்பட 24 மொழிகளில் வெளிவரும் சிறந்த குழந்தை இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது வழங்கி கவுரவம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான ‘பால புரஸ்கார்’ விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியல் புதுடெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டின் தமிழ் மொழிக்கான ‘பால புரஸ்கார்’ விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தன்வியின் பிறந்தநாள்’ என்றசிறார்களுக்கான கதை தொகுப்புக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

யூமா வாசுகி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச்சேர்ந்தவர். இவர் எழுத்தாளர், ஓவியர், கவிஞர், பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவரது இயற்பெயர் மாரிமுத்து.

மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ என்ற நூலை ‘கசாக்கின் இதிகாசம்’ என்றபெயரில் தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2017-ம் ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதை யூமா வாசுகி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘யுவ புரஸ்கார்’ விருது: ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளில் சிறந்த நூல்களை எழுதிய 35 வயதுக்குட்பட்ட இந்திய இளம் எழுத்தாளர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ‘யுவ புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சமஸ்கிருதம் தவிர இதர 23 மொழிகளுக்கான சிறந்த இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான ‘யுவ புரஸ்கார்’ விருது நேற்று அறிவிக்கப்பட்டது.

தமிழ் மொழிக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதுக்கு பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளம் எழுத்தாளரான லோகேஷ் ரகுராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தைச் சேர்ந்த லோகேஷ் ரகுராமன், ‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக ‘யுவ புரஸ்கார்’ விருது பெறுகிறார்.

தேர்வுக் குழு: ‘பால புரஸ்கார்' விருதுக்குரிய நூலை எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன், முனைவர் நிர்மலா மோகன், முனைவர் இரா. காமராசு ஆகியோரை கொண்ட தேர்வுக் குழுவினரும், 'யுவ புரஸ்கார்' விருதுக்குரிய நூலை முனைவர் கே.பஞ்சாங்கம், முனைவர் எம்.திருமலை, பத்திரிகையாளர் மாலன் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவினரும் தேர்ந்தெடுத்தனர்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, செப்பு பட்டயம் அடங்கிய சாகித்ய அகாடமி விருதுபுதுடெல்லியில் பின்னர் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

ஆளுநர், முதல்வர் வாழ்த்து: சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: “சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருதை வென்றுள்ள ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதை நூலாசிரியர் லோகேஷ் ரகுராமனுக்கும், ‘பால சாகித்ய புரஸ்கார் விருதை’ ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக வென்றுள்ள யூமாவாசுகிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்விருதுகள் தமிழ் இலக்கியத்துக்கு இவர்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்கு சான்றாக வழங்கப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: “நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழ்இலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் எழுத்தாளர் யூமா வாசுகி. ஏற்கெனவே சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக ‘பாலசாகித்ய புரஸ்கார் விருது’க்கு தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதேபோல காவிரிக் கரையில்இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாக தடம் பதித்து, ‘விஷ்ணுவந்தார்’ சிறுகதைத் தொகுப்புக்காக ‘யுவ புரஸ்கார்’ விருதுக்குதேர்வாகியுள்ள லோகேஷ் ரகுராமனுக்கும் எனது பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் சாகித்ய அகாடமிவிருதுக்கு தேர்வான எழுத்தாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

x