சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு, கடந்த 26-ம் தேதி இரவு முதல் உடல் வலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
கடந்த ஆண்டு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை பெற்று, ஒரு வார காலம் ஓய்வில் இருந்து பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த வாரம் அவரது மகளுக்கும் தொற்று ஏற்பட்டு, தற்போது சிகிச்சை முடிந்து அவர் மீண்டு வந்த நிலையில், காவல் ஆணையருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலும் தொடர்ந்து வீட்டிலிருந்து அன்றாடப் பணிகளை ஆணையர் மேற்கொள்வார் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.