தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் கரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மெட்ரோ ரயில் சேவை குறைந்த அளவில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, இனி வழக்கம்போல மெட்ரோ சேவை இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 5 முதல் 10 நிமிட கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், புறநகர் ரயில் சேவைகள் வேலை நாட்களில் இயக்கப்படுவதுபோல் இயக்கப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை குறைந்த சேவையுடன் இயக்கப்படும் எனறும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.