உபி வெற்றிக்காக களத்தில் இறங்கிய அமித் ஷா


மதுராவின் பாங்கே பிஹாரி கிருஷ்ணன் கோயிலில் அமித் ஷா

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தலில், பாஜக அரசின் 9 அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களது வெற்றிக்காக நேரடியாக களம் இறங்கியுள்ளார் அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் அமித் ஷா.

பாஜக ஆளும் உபியின் மேற்குப்பகுதியில் பிப்ரவரி 10-ல் முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதன் 58 தொகுதிகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முக்கிய மூத்த அமைச்சர்களில் 9 பேர் போட்டியில் உள்ளனர். முசாபர்நகருக்கு அருகிலுள்ள, ஷாம்லி மாவட்டத்தின் தானா பவன் தொகுதியில் கரும்புத் துறை அமைச்சர் சுரேஷ் ராணா மீண்டும் போட்டியிடுகிறார். பாஜகவின் அதிரடி தலைவராகக் கருதப்படும் இவர், 2012 தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டவர், சமாஜ்வாதி வேட்பாளரை வெறும் 265 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

முலாயம் முதல்வராக இருந்தபோது 2013-ல் முசாபர்நகரில் உருவான மதக்கலவரத்திலும் சுரேஷ் ராணாவின் மீது வழக்குப் பதிவானது. 2017-ல் இவர் சமாஜ்வாதியை 16,000 வாக்குகளில் தோற்கடித்தார். இத்துடன் அவர் மீதான வழக்குகள், பாஜக ஆட்சியில் வாபஸாகி கேபினெட் அமைச்சராக்கப்பட்டார்.

இவரைப் போலவே, முசாபர்நகர் தொகுதியில் கபில்தேவ் அகர்வால் மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு 10,704 வாக்குகளில் சமாஜ்வாதி வேட்பாளரைத் தோற்கடித்தவருக்கு கடும் போட்டி உள்ளது. இவர்கள் இருவரது வெற்றியைக் குறிவைத்து பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரான அமித் ஷா, தனது நேரடிப் பிரச்சாரத்தை ஷாம்லி மாவட்டத்திலிருந்து தொடங்கினார். அப்போது, இங்குள்ள கைரானாவின் இந்து குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக எழுந்தப் புகாரையும் அமித் ஷா நினைவுபடுத்தினார்.

மதுரா நகர் தொகுதியில் உபியின் மின் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா மீண்டும் போட்டியிடுகிறார். டெல்லி தலைமையகத்தில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த இவர், கடந்த 2017-ல் இதே தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்டு வென்றார். இங்குள்ள சாட்டா தொகுதியில், கால்நடைத் துறை அமைச்சர் லஷ்மி நாராயண் சவுத்ரி மீண்டும் போட்டியிடுகிறார். இவர்களுக்காக மதுராவை ஒட்டியுள்ள பிருந்தாவனின் பாங்கே பிஹாரி கிருஷ்ணன் கோயிலில் தரிசனத்துடன் தனது பிரச்சாரத்தை அமித் ஷா நேற்று தொடங்கினார். மதுராவின் ஸ்ரீபாபா வித்யா ஆசிரமத்தில் பாஜகவின் வாக்குசாவடி பொறுப்பாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

மதுராவின் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போத, ‘‘2017-ல் எங்களுக்கு முன்பாக ஆட்சி செய்த சமாஜ்வாதி மீது பல ஊழல் புகார்கள் எழுந்தன. இதுபோன்ற ஒரு புகாரும் பாஜக ஆட்சியில் கிடையாது. முக்தார் அன்சாரி, ஆஸம் கான் போன்ற கிரிமினல்களை சிறையில் தள்ளி பாஜக எடுக்கும் நடவடிக்கை, அகிலேஷ் பாபுவுக்கு வயிற்றுவலியை தருகிறது. அகிலேஷ் ஆட்சியை விட 70 சதவிகிதம் கிரிமினல் குற்றங்கள் குறைந்துள்ளன. கொலை 29 மற்றும் ஆள்கடத்தல் 35 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் அமலாக்கி வருகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

மதுராவின் இங்குள்ள கிருஷ்ணஜென்மபூமி கோயிலுக்கு அருகிலுள்ள கியான்வாபி மசூதி விவகாரம், அயோத்தியின் நிலப்பிரச்சனை போல் உருவாகி வருகிறது. தெய்வீக நகரமான மதுரா தொகுதி, பாஜகவுக்கு மிகவும் முக்கியமாக உள்ளது. மதுராவுக்கு பிறகு அமித் ஷா அருகிலுள்ள ஆக்ரா, புலந்த்ஷெஹர், அலிகர், அத்ரோலி, மீரட் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். அத்ரோலியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பாஜக முதல்வராக இருந்த கல்யாண்சிங்கின் பேரன் சந்தீப்சிங் போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா

ஆக்ரா ரணுவக் குடியிருப்பின் தனித்தொகுதியில் சமூகநலத் துறை அமைச்சர் டாக்டர் ஜி.எஸ்.தர்மேஷ் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். புலந்த்ஷெஹரின் ஷிகார்பூரில் வனத் துறை அமைச்சர் அனில் சர்மா போட்டியிடுகிறார். இங்கு அவர் 5-வது முறையாக வென்று அமைச்சாரானார். மீரட்டின் அஸ்தினாபூரில் உபியின் நீர்வளத் துறை அமைச்சரான தினேஷ் கத்திக் மீண்டும் போட்டியிடுகிறார். டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்தில் அமைச்சர் அத்துல் கர்க் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த 9 அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களுக்காக மேற்குப்பகுதியில் அதிகமுள்ள ஜாட் சமூகத்தைச் சேர்ந்த, சுமார் 250 தலைவர்களையும் அமித் ஷா டெல்லியில் நேற்று முன்தினம் அழைத்துப் பேசினார். இவர்கள் டெல்லி விவசாயப் போராட்டத்துக்கு பின் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியதால், அப்பகுதியில் வெற்றி என்பது பாஜகவுக்கு பெரும் சவாலாகி விட்டது. கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை, 2017 சட்டப்பேரவைக்கு அளித்ததுபோல் இம்முறையும் ஆதரவளிக்கும்படி ஜாட் சமூகத் தலைவர்களிடம் அமித் ஷா கோரியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x