“2026 தேர்தலில் அதிமுக தொகுதிகளையும் திமுக பறிக்கும்” - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு


கோவையில் நடைபெற்ற  திமுக முப்பெரும் விழாவின் நிறைவில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, செங்கோல் வழங்கிய திமுக கூட்டணிக் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள்.  படம்: ஜெ.மனோகரன்

கோவை: திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடந்தது.

விழாவுக்கு தலைமை வகித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “கடந்த முறை இங்கு நான் பங்கேற்ற கூட்டம் நாடு முழுவதும் டிரெண்ட் ஆனது. 8 முறை தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தை ராகுல்காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து முடித்தார். அன்று அவர் வழங்கிய இனிப்பு, எதிர்கட்சியினிரன் கணிப்புகளை பொய்யாக்கியது. இங்கு கொள்கைக்காக கூடியுள்ள நீங்கள் தான் என் நம்பிக்கையின் அடித்தளம். மேடையில் உள்ள தலைவர்கள் அந்த நம்பிக்கையின் ஆதாரம்.

இந்த வெற்றி விழா, தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடக்கும் பாராட்டு விழா அல்ல. அது மேடையில் உள்ள இண்டியா கூட்டணியின் உள்ளவர்களுக்கு நடக்கும் பாராட்டு விழா. இது சாதாரண வெற்றியல்ல. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. நம் அரசு மேல் நம்பிக்கை வைத்து, வாக்களித்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. புதிய வரலாற்றை படைப்பதற்கான வெற்றி.

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் கருணாநிதி வெற்றி பெற்றார். அப்போது ஆளும்கட்சியாக அதிமுக இருந்தது. 2004 கருத்துக் கணிப்புகள் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறினர். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்பொழுதும் அதே மாதிரிதான். பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என்றனர். ஆனால், அதை உடைத்து பாஜக தனித்து அரசமைக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளோம்.

இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை, புரட்சியாளர் அம்பேத்கர் கொடுத்த சட்ட புத்தகம் முன்பு தலை குனிந்து நிற்க வைத்துள்ளோம். இது இண்டியா கூட்டணியின் 41-வது வெற்றி.

கோவையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள். படம்: ஜெ.மனோகரன்.

2024-ல் கிடைத்த 40 தொகுதிகளுக்கான வெற்றி என்பது, திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு உள்ள திருப்தியில் கிடைத்த வெற்றி. தொடர் வெற்றிக்கு காரணம், கொள்கை உறவோடு, கடந்த 5 தேர்தல்களில் தமிழகத்தில் தொடரும் நம் கூட்டணி வெற்றி தான் நம் வெற்றிக்கும் அச்சாணி. இது தேர்தல் உறவு கிடையாது. கொள்கை உறவு.

2023-ல் நடந்த எனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரைசேராது என அறிவித்தேன். பாஜகவை தனிமைப்படுத்தினால் தான் வெற்றி பெற முடியும் என்றேன். ஜனநாயகம் முக்கியம் என்றேன். அதன் விளைவாக, 28 கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியை உருவாக்கினோம். அது பாஜகவுக்கு அதிர்ச்சியளித்தது. இதைத் தடுக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கினர். ஜார்கண்ட், டெல்லி மாநில முதல்வர்களை கைது செய்தனர். தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தும் விதத்தில் பேசினர்.

சிறுபான்மையின மக்களை தரக்குறைவாக பேசினர். உத்தரபிரதேசம், ஒடிசாவில் தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசினர். ஏராளமான பொய் செய்திகளை வாட்ஸ் அப் மூலமாக பரப்பினர். இவ்வளவு செய்தும் பாஜக 240 இடங்கள் பெற்றது. அது மோடியின் வெற்றி அல்ல, மோடியின் தோல்வி. முதல்வர்கள் சந்திரபாபுநாயுடு, நிதிஷ்குமார் ஆதரவு தராவிட்டால் மெஜாரிட்டி ஏது.

நாம் நம்பிய அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. 237 எம்.பிக்கள் பாஜவுக்கு எதிராக உள்ளனர். எனவே, பாஜக நினைத்ததை செய்ய முடியாது. தற்போது கூட தமிழகத்தில் இருந்து 40 உறுப்பினர்கள் செல்வதால் என்ன பயன் என்கின்றனர். அவர்கள் யார் என்றால் தங்களை அறிவாளிகளாக நினைப்பவர்கள். ஜனநாயக அடிப்படை தெரியாதவர்கள். இப்படி கேள்வி கேட்டு வாக்களித்த மக்களை இழிவுபடுத்துகின்றனர். 40 பேர் கேண்டினில் வடை சாப்பிடுவார்கள் என்கிறார்கள். வாயால் வடை சுடுவது உங்கள் வேலை. எங்கள் எம்.பிக்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தை சுடுவார்கள். வெயிட் அண்ட் சீ.

கடந்த 5 ஆண்டுகளில் நம் எம்.பிக்கள் 9,695 கேள்விகள் கேட்டுள்ளனர். 1,949 விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். 59 தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள் திமுக உறுப்பினர்களுக்கு எதிராக தான் பேசியுள்ளனர். மக்களுக்காக நம் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கப் போகிறது. பாஜகவின் வகுப்புவாத அரசியல், பாசிசத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேச்சை நம் உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். சமூகநீதிக்காக இந்திய நாடாளுமன்றத்தில் அதிக உரிமைக் குரல் எழுப்பினர்கள். மற்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் காட்டாக உங்களது ஒவ்வொரு உரைகள் அமைய வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம், சமூகநீதி, மதச்சார்பின்மை, பன்முகத்தை, பண்பாட்டு விழுமியங்களை காப்பது போல் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்காக, கடமைகள், உரிமைகள் நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுங்கள். பலம் பொருந்தியிருந்த போது பாஜகவை எதிர்த்தோம். தற்போது பலம் குறைந்துள்ள பாஜகவை கடுமையாக எதிர்க்க வேண்டும். வாக்களித்த மக்களுக்கும், கட்சிக்கும் உண்மையாக செயல்பட்டு தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். மக்களுக்காகவும், அரசியல் சாசனத்தை மாற்றத் துடிக்கும் பாஜகவை தடுக்க காவல் அரணாக 40 எம்.பிக்களும் இருப்பார்கள்.

திமுக கூட்டணி வெற்றி தான் கருணாநிதிக்கு பிடித்த பரிசு. எந்த சூழலிலும் கழகத்தின் வெற்றியை பற்றி சிந்திப்பவர். இன்னும் 24 அமாவாசைகள் தான் உள்ளது என்ற எதிர்கட்சி தலைவர் பழனிசாமி. சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தொகுதிகளையும் திமுக பறிக்கும். நான் ஆணவத்தில் கூறவில்லை.

தமிழக மக்களுக்கு செய்த நன்மையின் மீது நம்பிக்கை வைத்து சொல்கின்றேன். இந்தத் தேர்தலில் தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில், 221 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அடுத்து நடக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தொடர் வெற்றியால் மமதை வரவில்லை. மகிழ்ச்சி வந்துள்ளது. நம் உழைப்பு வீணாவில்லை.

எங்களை நம்பி பொறுப்புகளை கொடுத்தீர்கள், உங்களை நம்பிக்கையை வீணாக்காமல் உங்களுக்காக உழைப்போம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், 200-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை வைத்து செல்வோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இந்த வெற்றிவிழா கட்டியம் கூறட்டும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.