கடலூர் அருகே பாழடைந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், அதன் அருகில் விளையாடிய பிளஸ் 2 படிக்கும் 2 சிறுவர்கள் பலியாகினர். மேலும் ஒரு சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கடலூர் கிழக்கு ராமாபுரம் அடுத்த வண்டிக்குப்பம் பகுதியைச் சார்ந்தவர்கள் வீரசேகர், சுதீஷ்குமார் மற்றும் புவனேஷ். நண்பர்களான இவர்கள் மூவரும் தங்கள் ஊரில் உள்ள சமத்துவபுரம் பின் பகுதியில் இலங்கை அகதிகளுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பயன்பாடு இல்லாமல் இருக்கும் கட்டிடத்தின் அருகில் சென்று பேசிக் கொண்டிருப்பதும் விளையாடுவதும் வழக்கம். இவர்கள் மூவரும் வெள்ளக்கரை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கின்றனர்
பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கும் நிலையில், இன்று காலையில் மூன்று பேரும் அங்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்குள்ள ஒரு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சிறுவர்கள் அங்குதான் விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்த ஊர் பொதுமக்கள், உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனக் கருதி உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி வீரசேகர் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 2 சிறுவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்த புவனேஷ் என்ற சிறுவனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு புவனேஷ் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.