குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டி வீசியெறிந்ததில் 40 பேர் காயமடைந்தனர். சிறந்த காளைகள் மற்றும் மாடு வீரர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி, குமாரபாளையம் வளையக்காரனூரில் நேற்று நடைபெற்றது. போட்டி நடைபெறும் இடம் முழுதும் மரத்தடுப்புகளால் அடைக்கப்பட்டிருந்தன.
வாடிவாசல் அருகே கீழேவிழுந்தால் அடிபடாமல் இருக்கும்வகையில் தேங்காய் நார் கொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன. அப்போது கொம்பன், விரும்பாண்டி, முரட்டுக்காளை போன்ற காளைகளின் செல்லப் பெயர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள், ஊர் பெயரைச் சொல்லி காளைகள் அழைக்கப்பட்டன.
வாடிவாசல் திறந்ததும் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அங்கு சூழ்ந்துநின்ற ‘காளையர்கள்’ தாவிப்பிடித்து அடக்க முற்பட்டனர். இதில் சில காளைகள் வாடிவாசல் வழியாக நின்றுநிதானமாக வந்து அங்கு சூழ்ந்திருந்தவர்களை மிரட்டியபடி சென்றன.
மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காத காளைகளின் உரிமையாளர்ளுக்கு விழாக் குழுவினர் கட்டில், மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி அரைஞாண் கயிறு, மொபெட் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே காளைகளை தாவிப்பிடிக்கும்போது அவை முட்டி வீசியெறிந்ததில் 40 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவக் குழுவினர் முதலுதவி செய்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் இதில் பங்கேற்றன.
அதுபோல் 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் 6 குழுக்களாக பிரித்து களமிறக்கப்பட்டனர். மேலும், காளைகள் கால்நடை மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டன.
போட்டி நடைபெறும் இடத்தில் கரோனா விதிமுறைப்படி 150 பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக போட்டி நடைபெறும் இடத்தைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.