அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு முதல் மோடி - மெலோனி செல்ஃபி வைரல் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு: திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் திமுக முப்பெரும் விழா: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்த விழாவில், திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், தமிழக அமைச்சர்கள், திமுக தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில், கூட்டணிக் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். முப்பெரும் விழாவையொட்டி, கோவையில், 3000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

யூமா வாசுகிக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது: இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’விருது டெல்லியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதி வரும் 35 வயதுக்குட்பட்ட இளம் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் ‘யுவ புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. 2024-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் எழுதிய ‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, செப்புப் பட்டயம் ஆகியவை கொண்ட விருது புதுடெல்லியில் பின்னர் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும்.

ஜூன் 20-ல் பிரதமர் மோடி சென்னை வருகை: மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, 20-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அத்துடன், பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக பேச்சாளர் மீது குஷ்பு காட்டம்: முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற முறையில் வழக்கு தொடரப்போவதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

உத்தராகண்ட்டில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு: டெல்லியில் இருந்து 26 பயணிகளை ஏற்றிக்கொண்டு சோப்தா நோக்கி வந்த டெம்போ ட்ராவலர் ஒன்று உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

பிரதமர் மோடி பேச்சு @ ஜி7 மாநாடு: 50-வது ஜி7 உச்சி மாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. மாநாட்டில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்ப வளர்ச்சியானது ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். AI தொழில்நுட்பம் வெளிப்படைத்தன்மையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் அண்மையில் நடந்தது. விரைவில் பிரான்ஸ், பிரிட்டன, அமெரிக்கத் தேர்தல்கள் வரவுள்ளன. இதனை மேற்கோள்காட்டிப் பேசிய பிரதமர் மோடி, இந்திய மக்கள் தேர்தலில் வரலாற்று வெற்றி கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த ஆசிர்வாதம் ஜனநாயக உலகத்துக்கான வெற்றி. இவிஎம் தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை பாராட்டுக்குரியவை என்று பேசினார்.

மோடி - மெலோனி செல்ஃபி வைரல்: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், வீடியோ ஒன்றைப் பகிர்ந்த மெலோனி, ‘மெலோடி டீமிடம் இருந்து ஹலோ’ என்று கூற பின்னால் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த வீடியோவும் வைரல் ஆனது.

x