ஊரடங்கு நீக்கப்படுமா?- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை


முதல்வர் ஸ்டாலின்

கரோனா பரவல் சற்று குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 7-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், கடந்த 9, 16, 23 ஆகிய 3 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சனிக்கிழமை இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு கொண்டுவந்த இந்த கட்டுப்பாடுகள் வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கிறது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து ஒவ்வொரு வாரமும் முதல்வர் தனியாக அறிவித்து வருகிறார்.

இந்த கட்டுப்பாடுகளால் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதோடு, சென்னையில் தொற்று குறையத்தொடங்கி உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிய இன்னும் 4 நாட்களே இருப்பதால், அடுத்தகட்ட ஆலோசனை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கரோனா வேகம் குறைந்துள்ளதால் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டுமா, ஞாயிறு முழு ஊரடங்கைத் தொடர வேண்டுமா அல்லது கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அமல்படுத்தலாமா என்பது குறித்து விவாதித்து வருகின்றனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் அளிக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்த கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

x