உத்தராகண்ட் காங்., முன்னாள் தலைவர் பாஜகவில் இணைகிறார்?


கிஷோர் உபாத்யாய

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. மார்ச் 10-ல் முடிவுகள் வெளியிடப்படவிருக்கின்றன.

தேர்தல் நெருங்க நெருங்க, அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு முரண்பாடுகள் தலைதூக்கியிருக்கின்றன. அக்கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் புகைச்சலில் இருக்கின்றனர். அவர்களில் அம்மாநிலக் காங்கிரஸ் தலைவராகப் பதவிவகித்தவரும், மூத்த தலைவருமான கிஷோர் உபாத்யாயவும் ஒருவர்.

சமீபத்தில் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, உத்தராகண்ட் காங்கிரஸின் அனைத்துப் பொறுப்பிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆம் ஆத்மி கட்சியில் சேரும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கிஷோர் உபாத்யாய பாஜகவில் இன்று இணைகிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவில் இணையும்பட்சத்தில், அவருக்கு தேஹ்ரி தொகுதி ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், கட்சித் தலைமை குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தவருமான ஹரீஷ் ராவத்துக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமா எனக் கேள்விகள் எழுந்த நிலையில், அவருக்கு லால்குவா தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவரது சொந்தத் தொகுதியான ராம்நகரில் அவரது மகள் அனுபமா ராவத் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

x