பிப். 19-ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; 22-ல் வாக்கு எண்ணிக்கை


மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

“நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்” என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 21 மாநகராட்சிகள, 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, மாநில தேரதல் அதிகாரி பழனிகுமார் இன்று அறிவித்தார்.

அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 28-ல் தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி முடிவடையும்; வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும்; வேட்புமனுவை திரும்பப்பெற பிப்ரவரி 7 கடைசி நாள்; வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

காலை 10 முதல் மாலை 5 மணிவரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் என்றும் அதன்பின்னர், மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றுள்ளவர்கள் வாக்களிக்கலாம் என்றும் ஆணையர் கூறினார்.

மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் மார்ச் 2-ம் தேதி புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நடைபெறும் என்றும் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "கரோனா கட்டுப்பாடுகளால் தேர்தல் பேரணி பிரச்சாரத்திற்கு அனுமதி கிடையாது. சென்னையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள். 80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும். பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அதிகபட்சமாக பாதுகாப்பு வழங்கப்படும்; நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்காணிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் 5,794 வாக்குசாவடிகள் அமைக்கப்படும். சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். கரோனா பரவலை தடுக்க 13 பாதுகாப்பு உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான தேர்தல் வைப்புத் தொகை விவரம்: பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.500, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.1,000, மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.2,000.

இதர வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான தேர்தல் வைப்புத் தொகை விவரம்: பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.1,000, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.2,000, மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.4,000.

x