மேட்டூர் அணை நிரம்பிட வேண்டி காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு


சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர்: திருவையாறில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து, மேட்டூர் அணையில் விரைவில் நீர் நிரம்பி, விவசாயம் செழிக்க வேண்டி காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் நடுவே ‘காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர்கள் அமைப்பு சார்பில்’ இன்று காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது நெற்பயிர்களை காவிரித் தாய் என்ற வடிவத்தில் ஊன்றி வழிபட்டனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து காவிரிதாய் இயற்கை வழி வேளாண் உழவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.தங்கராசு நம்மிடம் பேசுகையில், “வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் விடுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் அணை திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. எனவே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ய வேண்டும். அந்த மழைநீர் மேட்டூர் அணைக்கு வந்து நிரம்ப வேண்டும்.

அதேசமயம் கர்நாடகத்திடம் இருந்து மாத வாரியாக தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை பெற தமிழக அரசு முயற்சியை எடுக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி, காவிரி அன்னைக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகளை விவசாயிகள் செய்திருக்கிறோம்” என்றார்.