டெல்லியில் நடைபெற்ற இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியை நிராகரித்ததுடன், அந்த ஊர்தியில் இடம்பெற்றிருந்த விடுதலைப் போராட்ட வீரர்களையும் புறக்கணித்ததையொட்டி, மதுரையில் அதே தலைவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சியை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதையொட்டி குடியரசு தினமான இன்று, பாரதியார் பணியாற்றிய மதுரை சேதுபதி பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களான வீரமங்கை வேலுநாச்சியர், அவருடைய படைத் தளபதி குயிலி, மாமன்னர்கள் மருது சகோதரர்கள், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதி ஆகியோரின் வேடமணிந்த சிறுவர்களும், அவர்களது மூகமுடி அணிந்த இளைஞர்களும் பேரணியாகச் சென்றார்கள். மாணவர் சங்கம் சார்பில் நடந்த இந்தப் பேரணியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன் தொடங்கிவைத்தார். இவ்வாறு பேரணியாகச் சென்று சிம்மக்கல் பகுதியில் இருக்கும் வ.உ.சிதம்பரனார் உருவச் சிலை, முனிச்சாலை காந்தி பொட்டல் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்கள் உருவச்சிலை, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் பி.ராமமூர்த்தி சிலை ஆகியவற்றுக்கும் அவர்கள் மாலை அணிவித்தனர்.
முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இந்தியாவின் 73-வது குடியரசு தின விழாவையொட்டி, விடுதலைப் போராட்டத்துக்காக, வீர காவியம் பாடிய மகாகவி பாரதியார் பணியாற்றிய இந்தப் பள்ளியில், அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். டெல்லியில் இயக்குவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த அலங்கார ஊர்தியை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அந்நியர்களின் ஏகாதிபத்தியம் தொடங்கிய நாளிலிருந்து நம்முடைய மண்ணிலே விடுதலைப் போராட்டம் நடத்தியவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி ஆகியோர். வெள்ளையர்களை அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு அடிகொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சொத்துகளை எல்லாம் விற்று கப்பல் வாங்கியவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார். அவருக்கு இந்தியாவில் யாருக்குமே வழங்காத கொடுமையான தண்டனையை வழங்கி, சிறையிலே செக்கிழுக்க வைத்தார்கள் ஆங்கிலேயர்கள். அப்படிப்பட்ட வஉசிக்கு இது 150-வது ஆண்டு.
இந்த ஆண்டில் அவரது சிலையும், மற்ற தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களும் இடம் பெற்றிருந்த ஊர்தியை அனுமதி மறுத்திருப்பது மிகமோசமான செயல். இதைக் கண்டிக்கிற வகையில், நம்முடைய தமிழக முதல்வர் அவர்கள் நீங்கள் டெல்லியில் அனுமதிக்காவிட்டால் என்ன, நாங்கள் சென்னை குடியரசு தின விழாவில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுக்க அந்த ஊர்தியை கொண்டுசெல்வோம் என்று நடத்திக் காட்டியிருக்கிறார். இன்று தொடங்குகிற இந்தப் போராட்டம் என்பது தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களை மறுதலிக்கிற ஒன்றிய அரசாங்கம் மாத்திரமல்ல, நம்முடைய அரசியல் சாசனத்தையே மாற்றி எழுதவும், இந்திய வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிற அவர்களின் செயலைக் கண்டித்து தமிழகத்தில் இருக்கிற ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள், இடதுசாரி சக்திகள் அனைவரும் சேர்ந்து குரல் எழுப்புகிற நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. ஒன்றிய அரசின் மோசமான இந்தப் போக்குகளை முறியடிக்க தமிழக மக்கள் ஒன்றுகூடி குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
“ஆளுநர் தன்னுடைய குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், திருக்குறள் ஆன்மிகத்தின் ஊற்றுக்கண் என்று சொல்லியிருக்கிறாரே?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “திருக்குறள் உலகப் பொதுமறை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிற நூல் அது. அதை வெறுமனே ஆன்மிக நூல் என்று சுருக்குவதை நாங்கள் ஏற்கவில்லை” என்றார்.
“தஞ்சையில் மதமாற்றம் காரணமாக மாணவி இறந்ததாக பாஜகவினர் போராட்டம் நடத்திவருகிறார்களே?” என்று கேட்டபோது, “மற்ற மாநிலங்களைப் போல மதவெறியாட்டத்துக்கு இடமில்லாத, மதநல்லிணக்க மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை மதவெறி மாநிலமாக மாற்றுவதற்காகத்தான் பாஜக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது. இந்த முயற்சியில் நிச்சயமாக பாஜக படுதோல்வி அடையும்” என்றார்.
“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும்?” என்ற கேள்விக்கு, “தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகுதான், தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை அதிகாரபூர்வமாகத் தொடங்க முடியும்” என்றார்.