இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ஆர்பிஐ அதிகாரிகள் மீது உரிய புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் 73-வது குடியரசு தின விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழா அரசு நிகழ்ச்சியாகவும் பல்வேறு துறை சார்ந்த பொது நிகழ்ச்சியாகவும் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று காலை ரிசர்வ் வங்கி வளாகத்தில் ஆர்பிஐ மண்டல இயக்குநர் சுவாமி தலைமையில், குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நிற்காதது குறித்து, அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்தியாளர்களிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக உரிய புகார் பெறப்படும்பட்சத்தில், அங்கு நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களையும், தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையும் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப் பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 17-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய குடியரசு தின விழாவில் ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நிற்காதது சர்ச்சைக்குள்ளாகி இருப்பதால், உரிய புகார் பெறப்படும்பட்சத்தில் சம்பந்தபட்டவர்கள் மீது, அரசு உத்தரவுக்கு கீழ்படியாமல் இருத்தல் பிரிவின்(188-ன்)படி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காஞ்சி விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், “தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு எழுந்துநிற்க வேண்டும் என்று ஒரு உத்தரவும் கிடையாது” என்று கூறி, கடந்த டிசம்பர் 10-ம் தேதி வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் 14-ம் தேதி, ‘அரசு மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின்போது அனைவரும் கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டும்’ என அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கனிமொழி எம்பி, “அரசாணையை தெரிந்து கொள்ளாதவர்கள் அதிகாரிகளாக எப்படிப் பணியாற்ற முடியும்; இவர்கள் தமிழ்நாடு அரசை விட மேம்பட்டவர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.