மாற்றத்தை நோக்கிய முதல்படி!


தோவாளை ஊராட்சியில் மஞ்சப்பை பிரச்சாரம்

அரசு கொண்டுவரும் மக்கள் நலத் திட்டங்களையும், முன்னெடுக்கும் புதிய முயற்சிகளையும் கிராமங்கள் வரை கொண்டு சேர்ப்பதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அந்தவகையில் இந்தக் குடியரசுதினத்தை, பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான பிரச்சாரமாக முன்னெடுத்து கவனம் குவித்துள்ளது தோவாளை ஊராட்சி.

தோவாளை ஊராட்சியில், இன்றுகாலை குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. கொடியேற்றியதோடு கலைந்து செல்லாமல், குடியரசு தின நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஊராட்சியின் சார்பில் மஞ்சள் பை விநியோகிக்கப்பட்டது. இதேபோல், தோவாளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மஞ்சள் பை விநியோகம் செய்யப்பட்டது.

தோவாளை ஊராட்சித் தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் என்.எம்.தாணு ஆகியோரின் முயற்சியால் ஊர்மக்களுக்கு மஞ்சள் பை விநியோகம் செய்யப்பட்டதோடு, இந்தக் குடியரசு நாளில் 'பிளாஸ்டிக்குக்கு விடை கொடுப்போம்' என பிரச்சாரம் மேற்கொண்டனர். தோவாளை ஊராட்சி மன்றத்தின் சார்பில் விநியோகிக்கப்பட்ட மஞ்சள் பையில், ‘மீண்டும் மஞ்சப்பை...பிளாஸ்டிக்குக்கு குட்பை’ என்னும் வாசகம் பிரதானமாக இடம்பெற்று இருந்தது.

இதுகுறித்து ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் என்.எம்.தாணு, காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, "அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது. அதில் எங்கள் ஊராட்சியின் பங்களிப்பாக இதைச் செய்து இருக்கிறோம். எங்கள் ஊரைப் பொறுத்தவரை தமிழகத்திலேயே பழமையான பிரமாண்டமான மலர்ச்சந்தை இருக்கிறது. தென் மாவட்டங்களுக்கான பூக்களின் விலையையே தோவாளை சந்தைதான் நிர்மாணிக்கிறது. பூக்கள் வரத்துக்கும், விற்பனைக்கும் இதுவரை பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாததாக இருந்தது. இதனால்தான் ஊராட்சியின் சார்பிலேயே மஞ்சப்பை விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். இப்போது முதல்கட்டமாக குடியரசு தின நிகழ்வுக்கு வந்த மக்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் மஞ்சப்பையை இலவசமாக விநியோகித்து விழிப்புணர்வைத் தொடங்கியிருக்கிறோம். அடுத்தகட்டமாக சந்தை உட்பட அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சப்பை பயன்படுத்தும் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளோம்" என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜேந்திர ரத்னு ஆட்சியராக இருந்தபோது, நெகிழி இல்லாத தமிழகத்தின் முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 20 மைக்ரானுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தடுத்து வந்த ஆட்சியர்கள் ‘நெகிழிப்பை’ பயன்பாட்டை கண்டுகொள்ளாததால், குமரியில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு தலைதூக்கியது.

இப்படியான சூழலில் அரசே தமிழகம் முழுமைக்கும் ‘மஞ்சப்பை’ பயன்பாட்டை முன்னெடுத்ததுள்ளது. அதில் தோவாளை கிராமத்தைப் போல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தன்னெழுச்சியாக தங்களை அய்க்கியப்படுத்திக் கொண்டால், சூழல் காப்புக்குப் பேருதவியாக இருக்கும்!...

x