மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்: புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு எச்சரிக்கை


பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: மின் கட்டணம் உயர்வை திரும்பப் பெறாவிட்டால் பொதுநல அமைப்பினர் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு இது தொடர்பாக இன்று பொதுநல அமைப்பினருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்தில் பாஜக– என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகு லாபத்துடன் இயங்கி வரும் மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்து மின்துறையை பாஜக அரசு சீரழித்து வருகிறது.

தனியார் மயமாக்கல் என்ற நிலையை எடுத்தபிறகு மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டு வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் பல முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள்.

உதாரணத்துக்கு, முன்பு ரூ.5 மின் கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது ரூ. 2 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த மின் கட்டண உயர்வு மிகவும் கண்டிக்கதக்கது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து கொதித்தெழுந்திருக்கிறார்கள். குறிப்பாக, மின் கட்டண உயர்வு மட்டுமல்லாமல் பல்வேறு யூனிட் அளவீடுகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது.

மின்கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் வளர்ந்து வரும் புதுச்சேரி நகரத்துக்கு ஏற்ப மின் துறையைக் கட்டமைக்கவில்லை. இதனால் புதுச்சேரியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

மின்தடையை போக்க நிரந்தரமான தீர்வை எடுக்காததால் நகரப்பகுதி அடிக்கடி இருளில் மூழ்குகிறது. தற்போது மின்துறையில் சில பணிகளுக்கு ஆட்கள் இல்லை. அதேபோல இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் புதைவட மின்கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட்ட இடங்களில் மின்கேபிள் பழுது ஏற்படும் போது இதற்கான பள்ளம் தோண்டும் பணிகளும், அந்த இணைப்புகளை சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இப்படிபட்ட நிலையில் மின்கட்டணம் உயர்வு என்பது மிகவும் கண்டிக்கதக்கது, வருந்ததக்கது.

ஆகையால் இந்த அரசு பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு மின் கட்டணம் உயர்வை திரும்பப்பெற வேண்டும். அப்படி இல்லையென்றால் மின்கட்டண உயர்வை கண்டித்து பொதுநல அமைப்புகளை திரட்டி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.