நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதால், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி குடியரசு தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றினார்.
உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தேசியக் கொடியேற்றினார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உடனிருந்தார்.
தொடர்ந்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட வருவாய் அலுவலர் ஏற்றுக் கொண்டார். இந்த அணிவகுப்பில் காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை ஆகியோர் பங்கேற்றனர்.
பல்வேறு துறைகள் மூலம் 94 அதிகாரிகளுக்கு நற்சான்றுகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். தொடர்ந்து விழாவில், தோடர் பழங்குடியின இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவில், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மோனிகா ராணா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி கூறியதாவது: “மாவட்ட ஆட்சியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். மாவட்ட ஆட்சியருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. முடிவு விரைவில் வரும்” என்றார்.