அதிமுகவினரிடம் வருத்தம் தெரிவித்த பாஜக எம்எல்ஏ


நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

சென்னையில், லாவண்யாவுக்கு நீதி கேட்டு பாஜக நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அதிமுகவை விமர்சித்துப் பேசினார். இந்நிலையில் குறிப்பிட்ட அந்தப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாஜக போராட்டம்

பள்ளி மாணவி லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னையில் பாஜக நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய பாஜகவின் திருநெல்வேலி எம்எல்ஏவும், அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்தவருமான நயினார் நாகேந்திரன், ‘‘சட்டசபையில் துணிச்சலாகப் பேசும் அதிமுகவை இப்போது பார்க்க முடியவில்லை. ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் பாஜகவே எதிர்கட்சிபோல் உள்ளது’’ என்ற தொணியில் பேசினார்.

திருநெல்வேலி தொகுதியில் பாஜகவுக்கு பலமே இல்லை. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றதாலும், இதற்கு முன்பு அதிமுகவில் நயினார் நாகேந்திரன் இருந்ததாலுமே அவரால் நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் வெல்ல முடிந்தது. இப்படியான சூழலில் அதிமுகவை நயினார் நாகேந்திரன் விமர்சித்துப் பேச, அது அதிமுகவினரை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்த உரை குறித்து, தன் சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கும் நயினார் நாகேந்திரன், ‘’உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் பேசும்போது சில வார்த்தைகள் அதிமுக பற்றித் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டன. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை’’ என விளக்கம் அளித்துள்ளார்.

x