நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் நிரந்தரமாக மூடப்பட்டது!


புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழகக் காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயற்சி தளம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 30-ம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும், தமிழக போலீஸாரும் தனித்தனியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த கூலித் தொழிலாளி கலைச்செல்வனின் மகன் கே.புகழேந்தியின்(11) தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சேர்க்கப்பட்ட புகழேந்தியின் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுவன் புகழேந்தி

இந்நிலையில், அந்தத் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வழக்குத் தொடர்ந்தார்.

"புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 30 -ம் தேதி 11 வயது சிறுவன் மீது, தவறுதலாகத் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. நான்கு நாட்களுக்கு பிறகு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார். அதுபோல சக்தி வாய்ந்த துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து சிறுவனின் மரணத்தை விசாரிக்க வேண்டும், சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும், துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவிட வேண்டும்" என அவர் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று (ஜன.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கடந்த டிசம்பர் 30-ம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. மேலும், பயிற்சித் தளம் நிரந்தமாக மூடப்படும்’ எனவும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இவற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே, சிறுவனின் தரப்புக்கு ஆதரவாக நின்றவரும், இதற்காக போராட்டங்களை முன்னெடுத்தவருமான கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, "இந்தத் தீர்ப்பை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் வரவேற்கிறேன். மேலும், இந்த விவகாரத்தில் எங்களின் இதர கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.

x