ஆர்.பி.என்.சிங்கை 'அன்ஃபாலோ' செய்த ராகுல் காந்தி!


காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.என்.சிங் பாஜகவில் சேர்ந்ததையடுத்து, ட்விட்டரில் அவரைப் பின்தொடர்வதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார்.

குன்வர் ரத்தன் சிங் பிரதாப் நாராயண் சிங் எனும் ஆர்.பி.என்.சிங், மத்திய உள்துறை இணையமைச்சராகக் காங்கிரஸ் அரசில் பதவிவகித்தவர். 2009 மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் குஷிநகர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர். குஷிநகரின் சைந்த்வார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான ஆர்.பி.என். சிங், 1996 முதல் 2009 வரை பட்ரோனா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர். அவரது தந்தை சி.பி.என்.சிங்கும் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவராகக் கருதப்பட்டவர். இந்திரா காந்தி ஆட்சியில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சராக இருந்தவர். ஆர்.பி.என்.சிங், ஜார்க்கண்ட் மாநிலக் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்துவந்தார்.

பாஜகவில் சேர்ந்த கையோடு, ட்விட்டரில் தனது ப்ரொஃபைல் படத்தை மாற்றியிருக்கிறார் ஆர்.பி.என்.சிங். அதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தர பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார். இன்று பாஜக தலைமை அலுவலகம் சென்று அக்கட்சியில் சேர்ந்த அவர், “32 ஆண்டுகளாக ஒரு கட்சியில் இருந்தேன். ஆனால், முன்பிருந்ததைப் போல அந்தக் கட்சி இப்போது இல்லை. இனி பிரதமர் மோடியின் கனவுகளைப் பூர்த்தி செய்யும் தொண்டராக என் பணியைத் தொடர்வேன்” எனக் கூறினார். கட்சியில் சேர்ந்த கையோடு, பாஜகவின் நட்சத்திரப் பரப்புரையாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.பி.என். சிங்.

சோனியா குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய தலைவராகக் கருதப்பட்ட ஆர்.பி.என்.சிங், தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குத் தாவியிருப்பது ராகுல் காந்தியை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. முன்னதாக, இன்று அவர் பாஜகவில் சேர்ந்த செய்தி வெளியானதையடுத்து, டெல்லி காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து அவரது பெயர்ப் பலகை அகற்றப்பட்டது.

எனினும் பிரியங்கா காந்தியும் இன்ன பிற காங்கிரஸ் தலைவர்களும் ஆர்.பி.என்.சிங்கை ட்விட்டரில் இப்போதுவரை பின்தொடர்கிறார்கள்.

x