ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 10 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வாங்கி மோசடி செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தார் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜய நல்லதம்பி. இதன் அடிப்படையில் போலீஸார், ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விஜய நல்லதம்பி வழியாகவே பணம் கொடுத்ததாகப் பலரும் புகார் கூறியதால், அவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதிமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதால் இருவரும் தலைமறைவானார்கள். பிறகு, ராஜேந்திர பாலாஜியைக் கர்நாடகா மாநிலம் ஹாசனில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார்.
அடுத்த ஒரு வாரத்தில் கோவில்பட்டி அருகே விஜய நல்லதம்பியை மடக்கிப் பிடித்த போலீஸார், இந்த மோசடி குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தினமும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரும் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தான கார்த்திகா ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது விஜய நல்லதம்பிக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியிருக்கிறது. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.