’டிஜிட்டல்’ உலகில் மற்ற கட்சிகளைவிட பாஜக எப்போதுமே ஒரு படி முன்னோக்கி சிந்திப்பது வழக்கம். ஏற்கெனவே மிஸ்டு கால் வழியாக உறுப்பினர்கள் சேர்க்கையை அக்கட்சி செய்திருந்தது. கரோனா பெருந்தொற்றுக் காலமான இப்போது, நேரில் போய் நிதி திரட்டுவதில் சிரமம் இருப்பதால் இணைய வழியில் கட்சிக்கு நிதி திரட்டிவருகிறார்கள் பாஜகவினர்.
இதில் குறைந்தபட்சமாக 5 ரூபாய் முதல் 50, 100, 500, 1000 ஆகிய பங்களிப்புத் தொகையை செலுத்த முடியும். இதன் மூலம் நிதி செலுத்துபவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. கூடவே இந்த இணையவழி பணம் அனுப்பும் படிவத்திலேயே பாஜகவில் உங்களை ஈர்த்த தலைவர் யார் என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக இணைய வழியில் கூகுள் மூலம் விளம்பரமும் கொடுத்துள்ளது பாஜக கட்சித் தலைமை.
பொதுவாக கம்யூனிஸ்ட்களை பாஜக தரப்பு, ‘உண்டியல் கட்சி’ என விமர்சிப்பது வழக்கம். இப்போது பாஜக டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் உண்டியல் பணம் பிரிப்பதாக காம்ரேடுகள் இணையத்தில் கிண்டல் செய்துவருகின்றனர்.