ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூர் பகுதியில், மசூதி ஒன்று கட்டப்பட்டுவந்தது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் கலவரம் வெடித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் புத்த ஸ்ரீகாந்த் ரெட்டி, கர்னூல் மாவட்ட பாஜக தலைவர் நந்தியால் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டார்.
இதையடுத்து, அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி பாஜகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர். கலவரத்தில், மற்றொரு தரப்பினருக்கு ஆதரவாக உள்ளூர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ செயல்பட்டதாக அம்மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், கர்னூல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் புத்த ஸ்ரீகாந்த் ரெட்டி, நந்தியால் ஆகியோரை நேற்று (ஜன.24) சந்தித்துப் பேசினார் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வீ.முரளிதரன்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“வன்முறையைத் தூண்டுவதற்காக புத்த ஸ்ரீகாந்த் ரெட்டி ஆத்மகூருக்குச் செல்லவில்லை. சட்டவிரோதக் கட்டுமானப் பணி நடந்ததால்தான் அங்கு சென்றிருந்தார். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மசூதி கட்டுமானப் பணிக்கு உள்ளூர் நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. அதுகுறித்து விசாரிக்க, போலீஸ் அனுமதியுடன்தான் அவர் அங்கு சென்றிருந்தார். எனினும், அவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அவரைக் கொல்ல சதி நடந்ததாகச் சந்தேகப்படுகிறேன்” என்று முரளிதரன் கூறினார
மேலும், “சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பலப்படுத்த முயற்சி செய்தவரைக் கைதுசெய்திருக்கும் அரசு, சட்டத்தை மீறும் வகையில் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவளிக்கிறது. இதை ஆந்திர அரசு திருத்திக்கொள்ள வேண்டும். இது முதல் சம்பவம் அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஆந்திர அரசின் தவறான நிர்வாகம், ஊழல் ஆகியவற்றின் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். தற்போது சட்டம் ஒழுங்கிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சட்டத்தை மதிப்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சட்டத்தை மீறுபவர்கள் அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆதம்கூருக்குச் செல்ல ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாஜக தலைவர்களும் இந்த நாட்டின் அங்கம்தானே? அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியேற்றிருக்கும் ஆந்திர முதல்வர் அதைப் பாதுகாக்க வேண்டும்” என்றார் முரளிதரன்.
அத்துடன், “கர்னூலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பயங்கரவாத நடவடிக்கைகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளும் நடைபெற்றுவருகின்றன. எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றன. இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் கேரளத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்கள். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியின் அரசால் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்” என்று முரளிதரன் கூறினார்.