மதமாற்ற வீடியோ எடுத்த நபர் டிஎஸ்பி முன்பு ஆஜராக உத்தரவு!


உயர் நீதிமன்றம்

தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோவை பதிவு செய்த நபர் வல்லம் டிஎஸ்பி முன்பு நாளை காலை நேரில் ஆஜராகி செல்போனை ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம். திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவியை விடுதியை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக விடுதி வார்டன் சகாயமேரி (62) வற்புறுத்தியதாகவும் இதனால் விஷம் குடித்ததாகவும் மாணவி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து, வார்டன் சகாயமேரியை போலீஸார் கைது செய்தனர். அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறியிருந்தார். இதனிடையே, மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, பிரேத பரிசோதனை முடிந்தும் மாணவியின் உடலை வாங்க மறுத்து மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோரும், பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். பின்னர், மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மாணவியின் உடலை பெற்று தகனம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி முருகானந்தம் மகளின் உடலை பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கொண்டுச் சென்று தகனம் செய்தார்.

மாணவியின் இறுதிச்சடங்களில் பங்கேற்ற பாஜகவினர்

இந்நிலையில் முருகானந்தம் மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முருகானந்தம் அவரது மனைவி ஆகியோரிடம் தஞ்சாவூர் 3வது நீதித்துறை நடுவர் பெற்ற ரகசிய வாக்குமூலத்தின் நகல் நீதிபதியிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்ததாக கூறப்படும் வீடியோ பதிவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார். அந்த வீடியோ பதிவில் உள்ளது மாணவியின் உண்மையான குரல் தானா, வீடியோ உண்மையானது தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிபடுத்த வேண்டியதுள்ளது.

இதனால் அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை அளிக்க வேண்டும். அதனை சென்னையிலுள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு நாளையே டிஎஸ்பி அனுப்பி வைக்க வேண்டும். தடயவியல் மைய இயக்குநர் செல்போனை ஆய்வு செய்து உண்மை தன்மை குறித்து அதே நாளில் அறிக்கை அளிக்க வேண்டும். மாணவின் உடற்கூராய்வு அறிக்கையை தஞ்சாவூர் தடயவியல் ஆய்வு மைய அலுவலர் ஜனவரி 27-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறி வழக்கு விசாரணைய ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

x