தடுப்பூசி பக்கவிளைவுகளை பதிவுசெய்யாத ஒரே நாடு இந்தியாதான்!


கட்டாய தடுப்பூசிக்கு எதிராக மதுரையில் நடந்த போராட்டம்.

கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த அமைப்பின் தலைவர் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன், நாணல் நண்பர்கள் தமிழ்தாசன், உமர் பரூக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போராட்டம் குறித்து தங்கப்பாண்டியன் கூறியதாவது, "கரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கொன்றில், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தடுப்பூசியை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், நடைமுறையில் கட்டாயப்படுத்துகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்கும், தியேட்டருக்கும் வரக்கூடாது, பள்ளிக்கு வரக்கூடாது, விமானம், ரயில், பேருந்தில் பயணிக்க கூடாது, பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கக்கூடாது என்று ஏராளமான தடைகளை விதிக்கிறார்கள். இப்படி உரிமைகளும், சலுகைகளும் மறுக்கப்படுவது நியாயமானதல்ல.

உலகம் முழுவதும் தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனால் ஏற்படுகிற சின்னச் சின்ன பக்க விளைவுகள் முதல் இறப்பு வரையில் எல்லாவற்றையும் பதிவு செய்கிறார்கள். இதன் மூலம் அடுத்தடுத்த தடுப்பூசிகளில் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்பதால் இதைச் செய்கிறார்கள். இந்தியாவில் அப்படியான எந்த நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை. ஆயிரம் பேரில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதைப் பதிவு செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. நோய்களுக்காக தொடர் சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரித்து, அந்தந்த மருத்துவர்கள் தடுப்பூசி போட்ட பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகளைப் பதிவு செய்ய வேண்டும். கரோனா மருத்துவத்தில், அலோபதிக்கு மட்டுமே அரசு முக்கியத்துவம் தருகிறது. சித்த மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட பிற மருத்துவ சிகிச்சைகளுக்கும் அதே முக்கியத்துவமும், நிதி ஒதுக்கீடும் அரசு செய்ய வேண்டும். மக்கள் விரும்புகிற மருத்துவத்தைப் பெற அரசே தடை ஏற்படுத்தக்கூடாது" என்றார்.

x