தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி


கோப்புப்படம்

சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவைக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவாவை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது.

எப்போதும் இடைத்தேர்தலில் போட்டியிடாத பாமக, விக்கிரவாண்டி தொகுதியில் செல்வாக்கு அதிகம் இருப்பதாலும், மக்களவைத் தேர்தல் தோல்வியில் இருந்து வெளியே வரவும், அத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்தது.

அதேநேரம், பாஜகவும் போட்டியிட விரும்பியது. இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்ததால், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டியிட பாஜக சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில், “கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம். வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

நாதக வேட்பாளர் மருத்துவர் அபிநயா: நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பெயரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஜூலை 10-ல் நடைபெறும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி) போட்டியிட உள்ளார். கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், நாம் தமிழர் கட்சி வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என அறிவித்துள்ளார். இடைத்தேர்தலிலும் மைக் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

x