தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தை அவ்வளவு லேசில் விட்டுவிட தயாராக இல்லை பாஜகவும் இந்துத்துவா அமைப்புகளும். மூன்று நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த மாணவியின் உடலை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை செய்திருக்கிறது அவரின் குடும்பம். மதமாற அவர் வலியுறுத்தப்பட்டார் என்று அவரது பெற்றோர்கள் அளித்துள்ள புகாரின் பேரில் மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்பதை நிறுவும் முயற்சிகளில் அழுத்தமாக இறங்கியிருக்கின்றனர் பாஜகவினர்.
மாணவியின் உடலை வாங்காமல் வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தியவர்கள், நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அதிரடியாக அடுத்தகட்ட பிரச்சாரங்களில் இறங்கிவிட்டார்கள். மாணவி பேசும் வீடியோ வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. ஒரு பள்ளியில் மாணவிகள் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டித்து மாணவிகள் பேசும் பழைய வீடியோ ஒன்றை எடுத்து தற்போது வெளியிட்டு வருகிறார்கள்.
மாணவியின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ‘மன்னித்துவிடு மகளே!’ என்ற தலைப்பில் திமுகவினர் உள்ளிட்ட கட்சிகளையும் பிற அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் விமர்சித்து எழுதப்பட்டுள்ள பதிவு பலராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி மாணவியின் பெற்றோர் இன்று தஞ்சாவூர் மூன்றாம் எண் நீதித் துறை நடுவர் முன்பு ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர். பாஜகவினருடன் வந்த மாணவியின் பெற்றோர் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தங்கள் மகள் தற்கொலை குறித்த வாக்குமூலத்தை நீதிபதியிடம் அளித்தனர்.
அங்கு பதிவு செய்யப்பட்ட அவர்களது வாக்குமூலம் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.