விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: தமிழிசையுடன் அண்ணாமலை சந்திப்பு


தமிழிசை மற்றும் அண்ணாமலை

சென்னை: பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று சந்தித்துப் பேசினார்.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவின்போது, மேடையில் அமர்ந்திருந்த வெங்கய்யா நாயுடு,அமித் ஷா ஆகியோருக்கு வணக்கம் வைத்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் சென்றபோது, அவரை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தோல்வி குறித்து மாறுபட்ட கருத்து: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அண்ணாமலையும், தமிழிசையும் மாறுபட்டகருத்துகளைத் தெரிவித்த நிலையில், தமிழக பாஜகவில் உட்கட்சிபூசல் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக வும், அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே மோதல் போக்குஇருப்பதாகவும் கூறப்பட்டுவந்தது.

இதனால்தான், விழா மேடையில், தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, இதுதொடர்பான செய்திகள் வெளியாகிய நிலையில், தமிழிசை இதற்கு விளக்கும் அளித்து நேற்று முன்தினம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக ஆந்திராவில் அமித்ஷாவை சந்தித்தேன்.

அப்போது, தேர்தலுக்குப் பிறகான தொடர் நடவடிக்கைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்பதற்காகவே என்னை அமித் ஷா அழைத்தார். நானும் அது தொடர்பாகவே அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினேன். அவரும் எனக்கு, பலஅறிவுரைகளை வழங்கினாரே தவிர, கண்டிக்கவில்லை’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு அண்ணாமலை நேற்று சென்று அவரை சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக, அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலத் தலைவராக திறம்படச் செயல்பட்டவருமான, அக்காதமிழிசை சவுந்தரராஜன் இல்லத்துக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி,அதற்காக கடினமாக உழைத்த அக்கா தமிழிசை சவுந்தரராஜனின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது’ என குறிப்பிடுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜனும் தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழக பாஜக தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலையைச் சந்தித்ததில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.

இவர்களின் சந்திப்பின் மூலம் இதுவரை விமர்சனத்துக்குள்ளாகி வந்த பிரச்சினைக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

x