ஊரடங்கில் வீதிக்கு வந்தோருக்கு கரோனா பரிசோதனை!


உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றவருக்குப் பரிசோதனை

தமிழகத்தில் கரோனா மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்குச் செல்வோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்றுப் பரவல் உச்சத்தில் உள்ளது. இந்தச் சூழலில், ஊரடங்கு நாளான இன்று சாலைகளில் வலம் வந்தவர்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாகராஜா கோவில் சாலை

ஊரடங்கின் எதிரொலியாக நாகராஜா கோவில் சாலை உள்பட கன்னியாகுமரி நகரின் முக்கியச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. சாலைகளில் சுற்றுவோரை காவல் துறையினர் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில்தான் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி சார்பில் கரோனா ஒழிப்பின் அங்கமாக தொற்றுப் பரிசோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நாகர்கோவிலில் சாலைகளில் நடக்கும் கரோனா பரிசோதனை

மாநகராட்சியின், சுகாதாரப் பணியாளர்கள் சாலையிலேயே அவர்களின் சளி மாதிரி, பெயர், ஊர் விவரம் ஆகியவற்றைச் சேகரித்து அனுப்புகின்றனர். காவல் துறைக்குப் பயப்படாதவர்கள்கூட வீதிக்கு, வந்தால் கரோனா பரிசோதனைக்கு ஆளாவோம் எனும் அச்சத்தில் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

சாலையில் வலம் வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதால் அத்தியாவசியத் தேவையின்றி வீடுகளைவிட்டு வெளியே வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

மாநகராட்சியின் இந்த நன்முயற்சி அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்தால் ஊரடங்கின் நோக்கமும் நிறைவேறிவிடும் என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

x