இன்னமும் கூட குமரி மக்களின் சோகம் மறையவில்லை. சமூகவலைதளப் பக்கங்களில் ஜோகனின் மரணம் குறித்தே பேசி வருகின்றனர். பெற்றோர்கள் பலரும் மிகுந்த மன வேதனையில் இருக்கின்றனர்.
கடியப்பட்டிணத்தைச் சேர்ந்த ஜோகன் ரிஷி என்னும் நான்கு வயதே ஆன சிறுவனை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாத்திமா எனும் பெண் அந்த சிறுவனின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகைக்காக பீரோவுக்குள் அடைத்து கொலை செய்த சம்பவம் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குழந்தைகளுக்கு தங்க நகைகள் அவசியம் அணிவிக்கத்தான் வேண்டுமா எனும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
சிறுவன் ஜோகன் ரிஷி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவன் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் காப்பு, வெள்ளி அரைஞாண் கொடி ஆகியவற்றைக் கவனித்த பாத்திமா அவற்றைத் திருடும் எண்ணத்தில் அவனைத் தூக்கிச் சென்றார்.
குழந்தை மாயமான தகவல் வெளியானதும், கடற்கரை கிராமம் என்பதால் கடலுக்குள் விழுந்திருக்கக் கூடும் என்னும் சந்தேகத்திலேயே போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். நகைக்கு ஆசைப்பட்டு குழந்தையிடம் இருந்து நகையைப் பறித்த பாத்திமா, குழந்தை மூலம் வெளியே விஷயம் தெரிந்துவிடக் கூடாதென குழந்தையின் கையையும், வாயையும் கட்டி தன் வீட்டு பீரோவுக்குள் வைத்திருக்கிறார். இதில் சிறுவன் ஜோகன் ரிஷி மூச்சுத்திணறி பலியானான். ஊர் அடங்கியதும் பீரோவில் இறந்துகிடந்த சிறுவனின் சடலத்தை கடலுக்குள் தூக்கிப்போட காத்திருந்ததாக போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில் சொன்னார்.
குழந்தைகளுக்கு நகை எதற்கு?
ஒரு கூடை நிறைய பூ பூத்தாலும் அது ஒரு குழந்தையின் புன்னகைக்கு இணையாகாது என்பார்கள். ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நகைகளையும் போட்டு அழகுபார்ப்பது தவிர்க்க முடியாத விஷயம் ஆகிவிட்டது. பாத்திமா போன்ற கொடூர பெண்களுக்கு ஒருவகையில் பெற்றோர்களின் தங்கள் குழந்தைகளுக்கு நகை போட்டு அழகு பார்க்கும் எண்ணமும் தீனி போட்டுவிடுகிறது. பொதுவாகவே திருவிழாக் கூட்டங்களிலும், பேருந்து பயணத்தின்போதும் திருடுபோகும் நகைகளில் சரி பாதி குழந்தைகள் அணிந்திருப்பவைதான்.
குழந்தைகளுக்கு நகை போடுவதே பெரும் ஆபத்து என்று எச்சரிக்கிறார் சமூக ஆர்வலர் பாண்டியன். அவர் இதுகுறித்து கூறும்போது, “குழந்தைகள் மழலை மொழி பேசுவார்கள். அவர்களிடம் இருந்து செயினோ, மோதிரமோ கழற்றினால்கூட நம்மைச் சரியாக அடையாளம் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதாகத்தான் திருடர்களின் மனநிலை உள்ளது. பொதுவாகவே குழந்தைகளைத் திருடும் கும்பல்கள் இப்போது அதிகம். அப்படியான சூழலில், குழந்தைகளுக்கு நகைகளை மாட்டிவிடுவது அவர்களுக்கு ஆபத்தை உருவாக்குவதாகத்தான் அர்த்தம். பெற்றோர்கள் தங்கள் குடும்ப உறவுகளின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது கூட, நகைகளை அணியாமல் செல்வதே சிறந்தது. ஏனென்றால் மனித மனம் எப்போதும் நிலையாக இருப்பது இல்லை. இதுகுறித்து அரசும், குழந்தைகள் நலத் துறையும் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்” என்றார்.
பொன் நகையைவிட உயர்ந்தது குழந்தைகளின் புன்னகை. அதைத் தொலைக்க விடலாமா? குழந்தைகளுக்கு நகைகளை அணிவிக்கும் பெற்றோர்கள் இனி இதைப் பற்றியும் சிந்திக்கட்டும்!