திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை கையகப்படுத்த முயற்சி: சுற்றுலாத் துறை நடவடிக்கைக்கு நிர்வாகம் எதிர்ப்பு


கோப்புப்படம்

திருச்சி/சென்னை/மதுரை: குத்தகை காலம் முடிவடைந்ததால் திருச்சி எஸ்.ஆர்ம் ஹோட்டலை கையகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக (டிடிசி) அதிகாரிகள் முயன்றனர். இதற்கு ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில், டிடிடிசி-க்கு சொந்தமான 4.74 ஏக்கர் இடத்தில், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டல் 1994 முதல் இயங்கி வருகிறது.

இந்நிலையில், குத்தகைக் காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால், டிடிடிசி சார்பில் ஹோட்டல் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை \யடுத்து, டிடிடிசி மண்டல மேலாளர் (பொறுப்பு) டேவிட் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வருவாய், சுற்றுலாத் துறை அலுவலர்கள் ஹோட்டலை கையகப்படுத்த நேற்று அங்கு

சென்றனர். எந்த நோட்டீஸும் அளிக்காமல், உடனடியாக காலி செய்யுமாறு கூறுவது சட்டப்படி தவறு என்று ஹோட்டல் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் ஏற்கெனவே முறையான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஐஜேகே நிர்வாகிகள், மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் அங்கு திரண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எஸ்ஆர்எம் குழுமத் தலைவரும், ஐஜேகே நிறுவனருமான பாரிவேந்தர், மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்டதால், பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக எஸ்ஆர்எம் குழும இயக்குநர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் சேனாபிரசாத் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “குத்தகை ஒப்பந்தத்தை நீட்டித்துத் தரும்படி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த பதிலும் இல்லை. மேலும், தற்போது அதிக வாடகை செலுத்தும்படி அரசுத் தரப்பில் கூறுகின்றனர். குத்தகையை நீட்டிக்கக் கோரி திருச்சி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது. சொத்தை கையகப்படுத்துவது சட்டவிரோதமாகும்” என்றனர்.

தலைவர்கள் கண்டனம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில். “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எஸ்ஆர்எம் ஹோட்டலை மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசியல் காரணங்களுக்காக மற்றவர்களைப் பழி வாங்குவது திமுகவுக்கு வழக்கமானதுதான்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐஜேகே பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வில்லை என்றால், மாநிலம் முழுவதும் ஐஜேகே சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

4 நாட்கள் தடை: இதற்கிடையே, ஹோட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி ஹோட்டல் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் முறையிடப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "டிடிடிசி மற்றும் ஹோட்டல் நிர்வாகம் இடையே ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தில், அரசு உத்தரவிட்டால் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசு சார்பில், இனிமேல் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் எந்த உத்தரவு நகலும் தாக்கல் செய்யப்படாத நிலையில், ஹோட்டலை கையகப்படுத்த 4 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மனுதாரர் ஹோட்டல் நிர்வாகத்தை ஜூன் 18 மாலை வரை தொடரலாம். விருந்தோம்பல் துறையாக இருப்பதால், இடைக்காலத் தடை வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

டிடிடிசி விளக்கம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சீ.சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: எஸ்ஆர்எம் ஹோட்டல் குத்தகை ஒப்பந்தம் கடந்த 13-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. சந்தை விலை அடிப்படையில் குத்தகை தொகை கணக்கிடப்பட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியரால் 30 ஆண்டு காலத்துக்கு ரூ.47.94 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், எஸ்ஆர்எம் நிறுவனம் ரூ.9.08 கோடி மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள ரூ.38.86 கோடியை இதுவரை செலுத்தவில்லை. மேலும், இது தொடர்பான ஒப்பந்தத்தில், குத்தகை காலத்தை நீட்டிக்குமாறு ஒப்பந்ததாரர் கோரக் கூடாது என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையை செலுத்துமாறும், குத்தகை காலம் ஜூன் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் ஹோட்டல் நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை காலம் முடிவடைந்ததாலும், நிலுவைத் தொகையை செலுத்தாததாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x