உ.பி-யில் பாஜகவை எதிர்த்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுவது ஏன்?


அரசியலில், குறிப்பாகத் தேர்தல் அரசியலில் விநோதங்களுக்குக் குறைச்சலே இருக்காது. அந்த வகையில், கூட்டணிக் கட்சியான பாஜகவை எதிர்த்து உத்தர பிரதேசத் தேர்தலில் களம் காண்கிறது ஐக்கிய ஜனதா தளம். பிஹாரில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவை எதிர்த்து, உத்தர பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுவதற்கு என்ன காரணம்?

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்துக் கூட்டணி தொடர்பாகப் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஆர்.சி.பி.சிங்குக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“உத்தர பிரதேசத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தோம். ஆர்.சி.பி.சிங் அதற்கான பணிகளில் ஈடுபட்டார். எனினும், கூட்டணி முயற்சியில் பலன் கிட்டவில்லை என்பதால், தனியாகப் போட்டியிட முடிவுசெய்தோம். எனினும், அது ஒரு பிரச்சினை அல்ல” என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் கூறியிருக்கிறார்.

இந்த முடிவால், பாஜகவுடனான கூட்டணியில் எந்தத் தாக்கமும் ஏற்படாது என பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார் விளக்கமளித்திருக்கிறார்.

இது புதிதல்ல!

இதற்கு முன்பும் பல மாநிலங்களில் ஐக்கிய ஜனதா தளம் தனியாகப் போட்டியிட்டிருக்கிறது என்று கூறியிருக்கும் லாலன், அதை வைத்து பிஹார் ஆளும் கூட்டணியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். டெல்லியைத் தவிர பிற மாநிலங்களில் இதுவரை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து இதுவரை போட்டியிட்டதே இல்லை. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை வெல்ல இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. எனினும் அதில் அக்கட்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பாஜகவுக்குச் செல்வாக்கு மிக்க குஜராத், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடவில்லை. அதேபோல், அருணாசல பிரதேசம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் இரு கட்சிகளும் தனித்தனியாகவே போட்டியிட்டிருக்கின்றன.

உறவும் முரணும்

2019 அருணாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 7 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் இருந்துவந்தது. எனினும், 2020 டிசம்பரில் அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 7 எம்.எல்.ஏ-க்களில் 6 பேர், அம்மாநில ஆளுங்கட்சியான பாஜகவுக்குத் தாவியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை ஐக்கிய ஜனதா தளம் இழந்தது. இப்படிப் பல்வேறு தருணங்களில் அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வரலாறு பாஜகவுக்கு உண்டு. கூட்டணியில் இருந்தாலும் பொது சிவில் சட்டம், என்.ஆர்.சி பட்டியல், பெகாசஸ் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க ஐக்கிய ஜனதா தளமும் தயங்கியதில்லை.

1990-களில் சமதா கட்சி காலத்திலிருந்தே பாஜகவுடனான உறவில் இருப்பவர் நிதீஷ் குமார். அதில் அவ்வப்போது விரிசலும் ஏற்பட்டதுண்டு. 2005 முதல் இரு கட்சிகளும் பிஹார் கூட்டணி அரசில் அங்கம் வகித்தன. எனினும், 2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து கூட்டணியிலிருந்து வெளியேறினார் நிதீஷ். அதன் பின்னர் நடந்த பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்குப் பின்னர், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஐக்கிய ஜனதா தளம்.

2020 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தைப் பலவீனப்படுத்த, சிராக் பாஸ்வானுடன் சேர்ந்து பாஜக வகுத்த ரகசிய வியூகத்தால், 43 இடங்களில் மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் வெல்ல முடிந்தது. 74 இடங்களில் வென்ற பாஜக, முதல்வர் பதவியை நிதீஷுக்குத் தந்துவிட்டாலும் அவ்வப்போது அரசுக்குக் குடைச்சல்களை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

x