விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தவெக போட்டியா? - பொது செயலாளர் விளக்கம்


ஈரோடு: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூசகமாகத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய புஸ்ஸி ஆனந்த், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்று கேட்கிறீர்கள். கட்சியின் தலைவர் 2026-ம் ஆண்டுதான் எங்கள் இலக்கு என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜய்தான் அறிவிப்பார். அவரது மக்கள் சந்திப்பு குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும். கட்சி மாநாட்டை நடத்துவதற்கான இடத்தை பரிசீலித்து வருகிறோம். எங்கு மாநாடு நடைபெறும் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

கடந்த 30 ஆண்டுகளாக விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதால். அதற்கான பலன் 2026-ம் ஆண்டு தேர்தலில் எங்களுக்குக் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

x