சரண்டர் காங்கிரஸ், சமாதானமான திமுக: இது புதுக்கோட்டை புரிதல்!


திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிரும் புதிருமாக இருந்த திமுக - காங்கிரஸ் கட்சிகள் தங்கள் மனக்கசப்பை மறந்ததுடன், இறங்கி வந்து இணக்கமாகியிருப்பதுதான் தற்போது புதுகை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலின்போது உருவான கசப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கலாம். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் அப்படியில்லை என்பதே சில மாதங்களாக நிலவிய நிலவரம். நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலிருந்து இரண்டு தரப்பும் எலியும் பூனையுமாகவே இருந்துவந்தன. ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட கருத்துவேற்றுமை வளர்ந்து கசப்பாக மாறி, இரு கட்சிகளும் எதிரெதிரே ஒட்டாமல் நின்றன. அக்கசப்பு எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து மறைந்துள்ளது. அப்படி என்ன மனக்கசப்பு, அது எப்படி மறைந்தது?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் 22 பேரில் 13 பேர் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வென்றார்கள். மீதம் 9 பேர்தான் அதிமுக கூட்டணியினர். இந்நிலையில் திமுகதான் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றப் போகிறது என்று அனைவரும் முடிவுசெய்திருந்தனர். அதனால், திமுக கூட்டணியில் 2 உறுப்பினர்களை கையில் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுத்தருமாறு கேட்டது.

திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், தமிழக சட்டத் துறை அமைச்சருமான ரகுபதி

திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான ரகுபதி அதற்கு மறுத்துவிட்டார். புதுக்கோட்டை மாவட்டமானது கரூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் என மொத்தம் 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் வருகிறது. அத்தனையிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். இதனால் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் இரண்டையும் திமுகதான் வைத்திருக்கும் என்று அப்போது திமுகவால் சொல்லப்பட்டது. இதனால், காங்கிரஸ் தரப்பு மிகவும் ஏமாற்றமடைந்தது. அவர்களின் இந்த ஏமாற்றத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் அவர் நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தையின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் 2 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு வாக்களித்தனர். அவர்களோடு சேர்ந்து ஒரு திமுக உறுப்பினரும் மாறி வாக்களித்து, அதிமுகவின் ஜெயலட்சுமியை மாவட்ட ஊராட்சியின் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தனர். காங்கிரஸ் செய்த பேருதவிக்குப் பிரதிபலனாக, அக்கட்சி விரும்பியபடி அக்கட்சியைச் சேர்ந்த உமாமகேஸ்வரிக்குத் துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி

பொருமிய திமுக... சாடிய காங்கிரஸ்

பெரும்பான்மை இருந்தும் பதவியைப் பிடிக்க முடியாத அவமானத்தில், திமுகவினர் சுருண்டுபோனார்கள். கட்சித் தலைமையும் மாவட்ட பொறுப்பாளர்களைக் கடுமையாகக் கடிந்துகொண்டது. காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக திமுக தரப்பினர் குற்றம்சாட்டினர். காங்கிரஸ் கட்சிக்கு துணைத்தலைவர் பதவியைக்கூட ஒதுக்காமல், திமுகதான் துரோகம் செய்தது என்று காங்கிரஸும் குற்றம் சுமத்தியது.

இதனால் ஏகத்துக்கும் கடுப்பான திமுகவினர், மாவட்டத்தில் இனி காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் உறவும் கிடையாது என்று உறுதி பூண்டனர். அதன்படியே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் 2 கட்சிகளும் விலகி நின்று தேர்தலைச் சந்தித்தன. இரு கட்சியினரும் தனித்தனியாகவே பிரச்சாரம் செய்தனர். அதன் பின்னர் நடைபெறும் மாவட்ட ஊராட்சி கூட்டத்திலும்கூட இணக்கமான சூழல் இல்லை.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக தலைவரான ஜெயலட்சுமி அங்கிருந்து ஒரே தாவாக தாவி திமுகவுக்கு வந்துவிட்டார். முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை, அவருக்கே திருப்பிக் கொடுத்தது திமுக தரப்பு. திமுகவுக்கு வந்துவிட்டாலும் திமுகவினர் யாரும் ஜெயலட்சுமியோடு இதுவரை இணக்கமாகவில்லை, அதிகப் பற்றுதல் இல்லை. அவரும் ஏதோ சுயேச்சை தலைவர் போல வருகிறார், போகிறார் என்ற நிலைதான் இருக்கிறது.

ஜெயலட்சுமி திமுகவில் இணைந்தபோது..

பொங்கல் பரிசுடன் ரொக்கத் தொகை வழங்காதது, பொங்கல் பரிசுப்பொருட்கள் தரம் குறைவாக இருந்தது, குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்காமல் இருப்பது என்பது போன்ற விஷயங்களால், திமுகமீது மக்கள் அதிருப்தியாக இருப்பதாகப் பேசப்படும் தற்போதைய சூழ்நிலையில் அதை முறியடிக்கும் விதமாக, நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை ஈட்டித்தர வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு மாவட்ட திமுக செயலாளருக்கும் இருக்கிறது. அதனால், திமுக தரப்பு தங்கள் மனவேதனையைக் குறைத்துக்கொண்டு இறங்கிவந்துள்ளது. காங்கிரஸ் தரப்பும் தங்கள் தவறை உணர்ந்து சரண்டர் ஆகியுள்ளது.

ஜனவரி 19-ம் தேதி, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜா என திமுக தரப்பு முழுமையாக ஆஜராகியிருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, ‘’ஊரக உள்ளாட்சி தேர்தலில் செய்ததுபோல மீண்டும் ஒருமுறை செய்துவிடாதீர்கள். ஏதோ கட்சித் தலைமையிடம் என்மேல் இருந்த நல்ல பெயரால் அப்போது நான் தப்பித்தேன். இனி ஒருமுறை இதுபோல் நடந்தால் என் தலை தப்பாது” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

ஆனால், காங்கிரஸ்காரர்கள் அப்போதும் இறங்கிவரவில்லை. “எங்கள் கட்சி உறுப்பினர்கள் இருவர் மாறி வாக்களித்ததைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி உறுப்பினர் ஒருவரும் மாறி வாக்களித்தாரே... அதைப்பற்றி ஏன் பேசவில்லை?” என்று எதிர்கேள்வி கேட்டார்கள். அதனால் சலசலப்பு எழுந்து சிறிதுநேரம் கழித்தே அடங்கியது.

சமாதானப் பேச்சுகளுக்குப் பிறகு, இனி அப்படியெல்லாம் நடக்காது என்று ஒருகட்டத்தில் காங்கிரஸ் தரப்பு சரண்டரானது. அதன்பிறகு காங்கிரஸ் விதித்த நியாயமான நிபந்தனை திமுகவினரை ரொம்பவே யோசிக்கவைத்தது. ’’நீங்கள் எங்களுக்குக் குறைவான எண்ணிக்கையில் சீட் கொடுத்தாலும் சரி ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் திமுகவினர் சுயேச்சையாகவோ வேறுவழிகளிலோ வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க வேண்டும். அவர்கள் நின்றால் எங்களால் வெற்றிபெற முடியாது, உங்களாலும் வெற்றிபெற முடியாது. அது அதிமுகவுக்குத்தான் சாதகமாகப் போகும். அதனால் அப்படி நடக்காமல் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்டவர்கள் உத்தரவாதம் அளித்தனர்.

இந்த ‘டீலிங்’ ரொம்பவே பிடித்திருந்ததால், திமுகவும் இறங்கிவந்தது. அதனால் கொடுக்கும் சீட்டை வாங்கிக்கொள்வது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், அங்கெல்லாம் போட்டி வேட்பாளர்கள் களமிறங்காமல் பார்த்துக்கொள்வது என்று திமுகவும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டன. அதன்பின்னர் இருதரப்பும் மனவேற்றுமை மறந்து இயல்பாகப் பேசிக்கொண்டனர்.

இந்த ஒற்றுமை தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தால் சரிதான்!

x