மாவட்ட அரசு உயரதிகாரிகள் இருவரை மத்திய இணை அமைச்சர் ஒருவர், நாற்காலியால் சுழற்றி அடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. அதிகாரிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, மத்திய அமைச்சர் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். பிஜு ஜனதா தளம் ஆட்சியில், நவீன் பட்நாயக் முதல்வராக இருக்கும் ஒடிசா மாநிலத்தில் இந்தக் களேபரம் அரங்கேறி இருக்கிறது.
மத்திய அமைச்சரவை கடந்த ஜூலையில் மாற்றி அமைக்கப்பட்டபோது, ஒடிசாவைச் சேர்ந்த பிஸ்வேஸ்வர் துடு, நீர் சக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரத் துறை இணையமைச்சராக பொறுப்பேற்றார். ஒடிசாவின் மயூச்பாஞ்ச் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பிஸ்வேஸ்வர், வெள்ளியன்று(ஜன.21) அந்த மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்தபடி, மாவட்ட திட்டத் துறை இயக்குநர் அஸ்வினி குமார் மல்லிக், துணை இயக்குநர் தேபசிஷ் மொகபத்ரா என்ற மாவட்ட உயரதிகாரிகள் இருவரை பிஸ்வேஸ்வர் வரவழைத்திருக்கிறார்.
தனியறையில் நடந்த சந்திப்பில், பிஸ்வேஸ்வர் கேட்ட அரசு கோப்புகளை உயரதிகாரிகள் எடுத்துவராதது தொடர்பாக அவர்கள் மீது அமைச்சர் கோபம் கொண்டாராம். தொடர்ந்து அமைச்சர் தங்களைத் தாக்கியதாக, மாவட்ட உயரதிகாரிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரில் மொகபத்ராவின் ஒரு கை உடைந்திருக்கிறது. அஸ்வினி குமாரின் உடலிலும் காயங்கள் நிறைந்திருக்கின்றன.
சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த அரசு அதிகாரிகள், “பஞ்சாயத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், அமைச்சர் கேட்ட கோப்புகளை எடுத்துச் செல்லவில்லை. அது தொடர்பாக எவ்வளவோ விளக்கம் தந்தும் அமைச்சர் கோபம் குறையவில்லை. பலவாறாக எங்களை திட்டித் தீர்த்தவர், ஒரு கட்டத்தில் அறையை உள்தாழிட்டவராக, பிளாஸ்டிக் நாற்காலியால் எங்கள் இருவரையும் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். அடி தாங்காது அங்கிருந்து தப்பி ஓடி வந்தோம்” என்று அழுதிருக்கிறார்கள். மாவட்ட அதிகாரிகளின் புகாரையடுத்து, மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வருக்கு எதிராக ஒடிசா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தன் மீதான குற்றச்சாட்டை அமைச்சர் பிஸ்வேஸ்வர் மறுத்திருக்கிறார். சம்பவம் குறித்து அவர் விளக்கம் தரும்போது, “தொகுதி எம்பியாக, மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி குறித்த தகவல்களை அறிந்துகொள்ளவே அரசு கோப்புகளை கேட்டிருந்தேன். அவற்றை எடுத்துவராத அதிகாரிகளை கண்டிக்கவும் செய்தேன். ஆனால் தாக்கியதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை. அப்படி நான் தாக்கியிருந்தால், அவர்களால் என் அலுவலகத்தை விட்டு வெளியேறி இருக்க முடியுமா?” என்று கேட்டுள்ளார்.