எழுத்தாளர் குரு ராஜதுரை காலமானார்


குரு ராஜதுரை

கன்னியாகுமரி மாவட்டம், குஞ்சன்விளையைச் சேர்ந்த எழுத்தாளர் குரு ராஜதுரை(57) மாரடைப்பால் காலமானார்.

கன்னியாகுமரி மாவட்டம், குஞ்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் குரு ராஜதுரை. ‘இலைகள்’ என்னும் இலக்கிய அமைப்பில் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இருக்கிறார். ‘நீர் நிலவு’ என்னும் கவிதைத் தொகுப்பின் மூலமும், ‘சப்பாணி’ என்னும் தன் சிறுகதைத் தொகுப்பின் மூலமும் குமரி மாவட்டம் முழுவதும் அறியப்பட்ட இலக்கிய முகமாகவும் இருந்தார்.

நாடகங்களை இயக்குவதிலும் வல்லவரான இவர், தன் சொந்த ஊரான குஞ்சன் விளையிலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் ஏராளமான சமூக நாடகங்களை இயக்கி அரங்கேற்றியுள்ளார்.

குரு ராஜதுரை கலை, இலக்கிய தளத்தில் மிகவும் தீவிரமாக இயங்கிவந்தார். கலை மீது கொண்ட ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை வந்துவிடக் கூடாதென திருமணமும் செய்து கொள்ளவில்லை. இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.

இலைகள் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளரான அவர், இன்றும்கூட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இடலாக்குடி அசன் எழுதிய சிறுகதையின் மீதான விவாதம் இன்று நடப்பதாக இருந்தது. அந்நிகழ்வுக்கு இலக்கிய அன்பர்கள் பலரும் வந்துவிட்டு, நிகழ்ச்சி பொறுப்பாளர் குரு ராஜதுரை இன்னும் வரவில்லையே எனத் தொடர்புகொண்டபோதுதான், அவர் மாரடைப்பில் இறந்துபோனது தெரியவந்தது.

குரு ராஜதுரையின் மரணம், குமரி மாவட்ட இலக்கியவாதிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

x