கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வயது சிறுவன் கழுத்தில் போட்டிருந்த நகையை திருடிய பெண், சிறுவன் மூலம் விவரம் வெளியில் தெரிந்துவிடக் கூடாதென பீரோவுக்குள் பூட்டி வைத்துள்ளார். இதனால் மூச்சுத்திணறி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டிணம் பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சர்ட். இவரது மனைவி சகாய சில்ஜா. இந்தத் தம்பதியின் மகன் ஜோகன் ரிஷி(4), தன் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போனார். உடனே சிறுவனின் பெற்றோரும் பல இடங்களில் அவரைத் தேடினர்.
சிவப்பு கலர் டிரவுசர், சாம்பல் நிறச் சட்டையும் அணிந்திருந்தார் என்னும் தகவல் குறிப்போடு, சிறுவனைப் பார்த்தவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என சமூக வலைதளங்களிலும் பதிவுகள் வைரலானது. சிறுவனுக்காக பலரும் பிரார்த்தனைகளும் செய்தனர். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடற்கரை கிராமம் என்பதால், சிறுவன் கடலில் விழுந்திருக்கக் கூடும் என்னும் அச்சத்தோடு முதலில் கடற்கரையிலேயே தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.
மாயமான சிறுவன் ஜோகன் ரிஷி கழுத்தில் ஒரு பவுன் தங்க செயின், கையில் அரை பவுன் காப்பு, இடுப்பில் வெள்ளி அரைஞாண் கயிறும் போட்டிருந்தார். இதனால் நகையைத் திருடும் நோக்கத்தில் யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என்னும் கோணத்திலும் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த பாத்திமா என்னும் பெண் ஒன்றரை பவுன் நகையை அடகுவைக்கச் சென்றுள்ளார். அந்த நகையைச் சந்தேகித்த அடகுக்கடைக்காரர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் சந்தேகித்தபடியே குழந்தையை நகைக்காக பாத்திமா தூக்கிச் சென்றது தெரியவந்தது. அவர் நகையை பறித்துவிட்டு சிறுவன் வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக, வீட்டு பீரோவில் சிறுவனின் கையையும் வாயையும் கட்டி வைத்துப் பூட்டியுள்ளார். இதில் மூச்சுத் திணறி சிறுவன் ஜோகன் ரிஷி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை போலீஸாரிடம் பாத்திமா வாக்குமூலமாக கொடுக்க, கோபமான ஜோகன் ரிஷியின் உறவினர்கள் பாத்திமாவின் வீட்டை அடித்து நொறுக்கினர்.
காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், குமரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.