"மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி “செம்மொழிச்சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி உரையாற்றினார். அப்போது, சில அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன்படி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி “செம்மொழிச்சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.
மேலும், செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது என்றும் செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய, தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் முதல்வர் பேசினா்.