மரணத்தை வைத்து அரசியல் நடத்தும் தமிழகத்து கலாச்சாரத்தில் தற்போது பிஜேபியும் கலந்திருக்கிறது. மாணவி அனிதாவின் மரணத்தைக் கையிலெடுத்து பாஜகவுக்கும் நீட் தேர்வுக்கும் எதிராக தமிழக அரசியல் கட்சிகள் மிகப்பெரிய அளவில் அரசியல் செய்ததைப் போல, தஞ்சை மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்தைக் கையிலெடுத்து பரபரப்பு அரசியலில் குதித்திருக்கிறது பாஜக.
அரியலூர் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதயப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்த இவர், கடந்த 9-ம் தேதி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் பூச்சி மருந்து சாப்பிட்டதை மறைத்துவிட்டதால், பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரியவில்லை.
ஆனால், மறுநாள் அவர் தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டு இருந்ததைக் கவனித்த பள்ளி நிர்வாகம், பத்தாம் தேதியன்று உடனடியாக அவரது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி லாவண்யாவை அவர்களுடன் அனுப்பி வைத்தது. வீட்டிலும் பூச்சி மருந்து சாப்பிட்டதை அவர் சொல்லவில்லை. ஆனால், தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம் தேதி மாலை மரணம் அடைந்தார். அதற்கு முன் அவர், நீதிபதி முன்பாக அளித்திருக்கும் வாக்குமூலத்தில், “விடுதி வார்டன் சகாயமேரி, தன்னை விடுதியின் வேலைகளை செய்ய வைத்தார், விடுதி கணக்கு வழக்குகளை எழுதவைக்கிறார், விடுமுறை அளிக்க மறுத்தார்” என்று பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, அதனால் தற்கொலைக்கு முயன்றதாகச் சொன்னார். அதன்பேரில் கடந்த 19-ம் தேதி சகாயமேரியை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஒரு வீடியோ வெளியானது. மாணவியின் வாக்குமூலமாக ஒருவர் பதிவு செய்துள்ள அந்த வீடியோவில், மதமாற்றம் செய்ய உன்னை வலியுறுத்தினார்களா, அதனால்தான் தற்கொலைக்கு முயன்றீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இருக்கலாம் என்று லாவண்யா பதிலளித்திருந்தார். இதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி, மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால்தான் லாவண்யா உயிரிழந்தார் என்று விவகாரத்தைக் கிளப்பியது.
லாவண்யாவின் மரணத்துக்கு நீதி வேண்டும், அவரை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கிய பாஜக, மாணவியின் பெற்றோரை அழைத்துக்கொண்டுபோய் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் மாணவியின் உடலையும் வாங்க மறுத்தனர். இதனால் 19-ம் தேதி மாலையில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே லாவண்யாவின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.
போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள், அதனால் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜகவின் தஞ்சை மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ தலைமையில் தஞ்சையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எச்.ராஜா, கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
கட்டாய மதமாற்றம் குறித்து மாணவியின் வாக்குமூலத்தில் எதுவும் இல்லை என்று கூறும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “மாணவியின் பெற்றோர் இரண்டாவதாக அளித்துள்ள புகாரில் மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதாக கூறியுள்ளனர். அதன் பேரில் தற்போது விசாரணை நடந்து வருகிறது” என்று விளக்கமளித்துள்ளார். என்றாலும் எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ள பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தயாராக இல்லை. இந்தப் பிரச்சினையை தங்களின் அரசியல் ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறது பாஜக.