உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக பிரச்சாரம் செய்ய உள்ளது. இக்கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகர் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி, அவரது மகன் வருண் காந்திக்கு இடம் அளிக்கப்படவில்லை.
பிப்ரவரி 14 முதல் மார்ச் 7 வரையில் 7 கட்டங்களாக உபி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் பாஜக தன் ஆட்சியை தொடர்வதில், தீவிரம்காட்டி வருகிறது. இதன் வழக்கமான பிரச்சாரக் கூட்டங்களுக்கு தேர்தல் அறிவித்தது முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாகத் தொடரும் இணையவழிப் பிரச்சாரத்துக்கும் தேர்தல் ஆணையத்திடம் ஒவ்வொரு கட்சிகளும் தமது தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
பாஜகவால் சமர்ப்பிக்கப்பட்ட 30 பேர் கொண்ட பட்டியலில் தலைமைப் பிரச்சாரகராக பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளது. மற்ற முக்கியமானவர்களாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உபியின் முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் தினேஷ் சர்மா, கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் மாநிலத் தலைவரான ஸ்வதந்திரா தேவ்சிங் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய அமைச்சர்களில் அமித்ஷா, ராஜ்நாத்சிங், தர்மேந்தர் பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வீ மற்றும் உபி எனினும், கடந்த தேர்தல்களில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தியும், அவரது மகனான வருண் காந்தியின் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளன.
தாய், மகன் தவிர்ப்புக்கானப் பின்னணி
நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் பிலிபித்தின் எம்பியான மேனகா மற்றும் சுல்தான்பூரின் எம்பியான வருண் காந்தியை பாஜக சமீப காலமாக ஒதுக்கிவைத்துள்ளது. 2014-ல் பிரதமர் மோடி கேபினட்டின் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக்கப்பட்டிருந்தார். கடந்த அக்டோபர் 2016-ல் இந்திய பாதுகாப்புத் துறை தஸ்தாவேஜ்களை வெளிநாட்டவருக்கு அளித்ததாக வருண் மீது புகார் எழுந்தது. இதற்காக அவர் அழகிகளுடன் சல்லாபித்ததாகவும் கூறப்பட்ட புகாரையும் வருண் மறுத்திருந்தார்.
எனினும், கட்சி நிர்வாகத்தில் தேசிய பொதுச்செயலாளர் பதவியை வருண் இழந்தார். தொடர்ந்து, 2017 உபி சட்டப்பேரவை தேர்தலின் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலிலும் வருண் பெயர் இடம்பெறவில்லை. 2019 பிரதமர் மோடியின் 2-வது ஆட்சியில் மேனகா அமைச்சராக்கப்படவில்லை. இதையடுத்து, தன் கட்சித் தலைமையை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் வருண். டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவளித்ததுடன், பிரதமர் மோடியையும் தனது ட்விட்டர் பதிவில் நேரடியாகச் சாடியிருந்தார்.
தாய், மகனான இருவருமே, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள ‘காந்தி’ குடும்பத்தின் உறுப்பினர்கள். கணவர் சஞ்சய் காந்தியின் மறைவுக்குப் பின், காந்தி குடும்பத்தில் எழுந்த கருத்து வேறுபாடுகளால் மேனகா காந்தி பாஜகவில் சேர்ந்தார். மேனகாவுடன் அன்றி சகோதரர் வருணுடன், ராகுல் காந்தி, பிரியங்கா வதோராவின் உறவுகள் நல்லமுறையில் தொடர்கின்றன. அதேசமயம், தம் கட்சி மீது கடும் அதிருப்தியாக இருந்த வருணை, காங்கிரஸில் இழுக்கவும் அதன் மூத்த தலைவர்கள் முயன்றது நினைவுகூரத்தக்கது.