ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தேசிய அளவில் முதலிடம்: சேலம் ஆட்சியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய தலைமைச் செயலர்


ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தேசிய அளவில் முதலிடம் பெற்றதற்கான பாராட்டு சான்றிதழை தலைமைச்  செயலர் சிவ் தாஸ் மீனா, சேலம் ஆட்சியர் பிருந்தா தேவியிடம் வழங்கினார். 

சேலம்: ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 2023-ம் ஆண்டுக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றமைக்கான ஜல் ஜீவன் சர்வேக்‌ஷான் பாராட்டுச் சான்றிதழை, தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவிக்கு வழங்கினார்.

கடந்த 2022-2023-ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் ஊரக குடிநீர் இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 1,419 எண்ணிக்கையிலான பணிகள் மூலம் ரூ.149.92 கோடி செலவினம் மேற்கொண்டு 1,76,808 இல்லங்களுக்கு தனித்தனி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 2022 முதல் ஜூன் 2023 வரையிலான காலத்தில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி, தேசிய அளவில் முதலிடம் பெற்றமைக்காக ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் சர்வேக்‌ஷான் பாராட்டுச் சான்றிதழை, சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவிக்கு வழங்கினார்.