ராமநாதபுரம்: பரமக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.4.40 லட்சம் கைப்பற்றி, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நெடுஞ்சாலைத்துறையின் நபார்டு மற்றும் கிராமப்புற சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களின் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் நேற்று (ஜூன் 13) மாலை திடீர் சோதனை நடத்தினர்.
இரவு வரை நடைபெற்ற சோதனையில் அலுவலக மேலாளர் சுரேஷ்பாபு, தற்காலிக பணியாளர் ஹரிஹரன், இளநிலை உதவியாளர் சதீஷ், அலுவலக கண்காணிப்பாளர் அருளானந்தம் ஆகியோரிடம் இருந்து, கணக்கில் வராத பணம் ரூ. 1.38 லட்சம் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று பரமக்குடி சேதுபதி நகரில் தங்கியிருந்த மேலாளர் சுரேஷ் பாபு அறையை சோதனை மேற்கொண்டபோது கணக்கில் வராத பணம் ரூ. 3,02,300 மற்றும் முக்கிய அலுவலக ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.4,40,300 கைப்பற்றி, அலுவலக மேலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.