வாய்பேச முடியாத 4 வயது மகனைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை


சென்னையைச் சேர்ந்த ஒரு பெண், நான்கு வயதாகியும் தன் மகனுக்குப் பேச்சு வரவில்லையே என்ற சோகத்தில் மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

சென்னை, அண்ணாசாலை பெருமாள் முதலி தெருவைச் சேர்ந்தவர் ஷோபா(31). இவர், கடந்த 2014 ஆண்டு வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, தினேஷ்குமார் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பின் ஷோபா, வண்ணாரப்பேட்டையில் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் கீர்த்திக் என்ற ஆண் குழந்தை உள்ளது. 4 வயதாகியும் குழந்தை கீர்த்திக் வாய் பேசமுடியாததால், சோகத்தில் ஆழ்ந்த பெற்றோர், குழந்தையை பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. குழந்தை வாய்பேச முடியாமல் போனதால், மன உளைச்சல் அடைந்த ஷோபாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஷோபாவும் மனநல நிபுணர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று(ஜன.20) தினேஷ், தனது மனைவி மற்றும் குழந்தையை அண்ணாசாலையில் உள்ள மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இரவு பணிமுடிந்து வீட்டுக்கு வந்த தினேஷ், படுக்கையறைக் கதவு உள்ள பக்கம் பூட்டி இருந்ததால், கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த தினேஷ், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஷோபா தூக்கில் இறந்த நிலையிலும், குழந்தை கீர்த்திக் மெத்தையில் இறந்த நிலையிலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அண்ணாசாலை போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த போலீஸார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், குழந்தை கீர்த்திக்குக்கு 4 வயதாகியும் வாய்பேச முடியாது இருப்பதால் மனநலம் பாதிக்கப்பட்ட ஷோபா, குழந்தையைக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து கணவர் தினேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x