மதுரை மாவட்டத்துக்கான பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் காணொலி காட்சி வழியாகப் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த இந்த மண்ணில், கலைஞர் நீதிகேட்டு நெடும்பயணம் தொடங்கிய இந்த மண்ணில், எனக்கு அரசியல் பயிற்சி களமாக அமைந்த இளைஞரணி தொடங்கப்பட்ட இந்த மண்ணில், இந்த அரசு விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன். கரோனா காலமாக இல்லாமல் இருந்தால், மதுரையே குலுங்கக்கூடிய வகையில் இந்த விழா நடந்திருக்கும். நாங்களும் நேரடியாக பங்கேற்க வந்திருப்போம்.
கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சிறப்பாக, பிரமாண்டமாக நடத்துகிறவர் அமைச்சர் மூர்த்தி அவர்கள். காளையை அடக்க எப்படி மூங்கணாங்கயிறு அவசியமோ, அப்படி அவரை நாங்கள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். இல்லை என்றால், அவர் தன்னுடைய பாணியில் மிகப் பிரம்மாண்டத்தைக் காட்டிவிடுவார். பத்திரப்பதிவுத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து அரசுக்கு வருவாயைப் பெருக்கியவர் அவர். அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழலில் இருக்கிறார்.
அதைப் போலத்தான் நம்முடைய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள். அவர் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை நான் சொல்லவே தேவையில்லை. 3 தலைமுறைகளாக இந்த நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட குடும்பம் பிடிஆரின் குடும்பம். பி.டி.ராஜன் இந்த நாட்டின் அமைச்சராகவும், முதல் அமைச்சராகவும் இருந்தவர். தமிழகத்தில் கூட்டுறவுத் துறைத்கு அடித்தளம் அமைத்தவர் அவர். இன்று நிதி அமைச்சராக பொறுப்பேற்று பழனிவேல் தியராகராஜன் அவர்கள் சிறப்பாகப் பணியாற்றுகிறார். அமைச்சரவையிலேயே மிகமிக கடுமையான துறை நிதித் துறைதான். நிதி நிலைமோசமாக இருந்தாலும், அதைக் காரணமாகச் சொல்லாமல் அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் அவர். இதற்கான தன்னுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்" என்றார்.