மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்


கும்பகோணத்தில் நடந்த சிவசேனா ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி தனியார் பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதயப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அதற்குக் காரணம், இந்து மதத்தைச் சேர்ந்த அவரை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக ஒருசிலர் குற்றஞ்சாட்டினர். ஆனால், போலீஸார் தீவிர விசாரணையில் அது பொய்யான தகவல் என்று தெரியவந்தது. அதையடுத்து தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாணவியை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணம் மாநகர சிவசேனா கட்சியின் சார்பில், கும்பகோணத்தில் இன்று கண்டன மற்றும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் மாநகர் மாவட்டப் பொதுச் செயலாளர் குட்டி சிவக்குமார் தலைமையில், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவியை தற்கொலைக்கு தூண்டிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், தற்கொலை செய்துகொண்ட மாணவி குடும்பத்துதுக்கு 2 கோடி ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும், மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளி, கல்லூரிகள் அனைத்திலும் அரசு வருடத்துக்கு 4 முறை ஆய்வு செய்ய தனி கமிஷன் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

x