மதுரையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் பணி இன்றும் தொடர்ந்தது. அப்போது தவிட்டுச் சந்தைப் பகுதியில் சாலையோரம் இருந்த முனியாண்டி கோயில் இடிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து, பாஜக மற்றும் சங் பரிவார அமைப்புகள் அனைத்தும் போராட வேண்டும் என்று அனைத்து வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பாஜகவினர் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி ஏராளமானோர் அந்த இடத்தில் கூடினர். இதைத் தொடர்ந்து, மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டு வருவதாகவும், இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர், அங்கிருந்த சாமி சிலைகளைச் சுத்தம்செய்து பூஜை செய்தார்கள். திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டார்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.