மதுரை மாவட்டத்தில் முடிவுற்ற அரசு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
சென்னையில் இருந்தபடி இதைத் தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசும்போது, “சங்க கால மதுரையாக மதுரை நகர் இருந்தாலும் நாம் பார்க்கிற நவீன மதுரையை உருவாக்கியது திமுக அரசுதான். நகராட்சியை மதுரை மாநகராட்சியாக உயர்த்தியது, மாவட்ட நீதிமன்றம் கட்டியது, சென்னை உயர் நீதிமன்ற கிளையை மதுரைக்குக் கொண்டுவந்தது, மதுரை முத்து மேம்பாலம், ஆண்டாள்புரம் பசும்பொன் தேவர் பாலம், என்.எம்.ஆர்.சுப்புராமன் பாலம், மானம்காத்த மருதுபாண்டியருக்குச் சிலை, பரிதிமாற் கலைஞர் மணிமண்டபம், தேவநேயப் பாவாணருக்கு மணிமண்டபம், மதுரை கோட்ஸ் மேம்பாலம், வைகை ஆற்றின் குறுக்கே 3 தரைப்பாலம், ஒரு மேம்பாலம், செல்லூர் மேம்பாலம், மதுரை வடபகுதியில் முதல் ரிங்ரோடு போட்டது, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட், பூ மார்க்கெட், ஒருங்கிணைந்த வணிக வளாகம், எல்லீஸ்நகர் மேம்பாலம், 2 பாலிடெக்னிக்குகள், வாடிப்பட்டியில் கைத்தறி ஜவுளிப் பூங்கா, மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்தியது, புதிய டெர்மினல் கட்டியது, மதுரையில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் எல்லாம் திமுக ஆட்சியில் வந்தது.
சங்கம் வைத்த மதுரையில் அடுத்து மாபெரும் கலைஞர் நூலகம் அமையப்போகிறது. ரூ.114 கோடியில் 8 தளங்களைக்கொண்ட நூலகம் அது. அதேபோல மதுரை நகரை மேம்படுத்துவதற்காக மதுரை நகர வளர்ச்சிக்குழுமத்தை உருவாக்கியுள்ளோம். மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கடமையை உணர்ந்து வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். அந்த மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தைத் தொடங்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன். மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். 2 ஆண்டுகளில் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
நகரின் மையப்பகுதியில் உள்ள பல்வேறு விற்பனைச் சந்தைகள் அனைத்தையும் புறநகர்ப் பகுதிக்கு கொண்டுசெல்லும் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும். வைகை கரையோர சாலையை ரூ.100 கோடியில் விரிவுபடுத்துவோம். மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு வெளியே கொண்டுசெல்லப்படும். தற்போதைய சிறை பசுமைப் பகுதியாக மக்கள் பயன்பாட்டுக்கு மேம்படுத்தப்படும். விரகனூர் சந்திப்பு, ராஜாஜி மருத்துவமனை சந்திப்பு, அப்பல்லோ சந்திப்புகளில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை முன்னிறுத்தும் வகையில், மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். மதுரை அலங்காநல்லூரில் புதிய ஜல்லிக்கட்டு கலையரங்கம் பிரம்மாண்டமாய் அமைக்கப்படும்" என்றார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.