கூட்டுறவுச் சங்கங்கள் கலைப்புக்கு எதிரான சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை மாவட்டம் ஏ.ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் பிரகலாதன். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
“ஏ.ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க நிர்வாக குழு இயக்குநர்கள் அனைவரும் சேர்ந்து என்னை சங்கத்தின் தலைவராக தேர்வுசெய்தனர். கூட்டுறவுச் சங்க விதிகளின்படி கூட்டுறவுச் சங்க நிர்வாகக்குழுக்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
இந்தப் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் கூட்டுறவு சங்கங்களின் பணிகள் பாதிக்கப்படும்.
கூட்டுறவு சங்கத் தலைவர்கள் முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகளை முடக்கும் அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களை கலைக்கவோ, நிர்வாகக்குழுவை நீக்கவோ கூடாது என உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். அரசு தரப்பில், ‘‘சட்டத் திருத்த மசோதா மட்டும்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, “மசோதா நிலையில் வழக்கு தொடரமுடியாது. மசோதா சட்டமாகும் போதுதான் அதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யமுடியும். மனுதாரர் முன்கூட்டியே நிவாரணம் கேட்டு நீதிமன்றம் வந்துள்ளார். அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.