மாநகராட்சித் தேர்தல்: திருப்பியடிக்க காத்திருக்கும் திமுக!


நாகர்கோவில் மாநகராட்சி

தமிழகத்திலேயே பாஜக வலுவாகக் காலூன்றி இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது குமரி மாவட்டத்துக்கு 3 தொகுதிகளைக் கேட்டுப்பெற்ற பாஜக, அதில் நாகர்கோவிலில் வாகையும் சூடியது.

பாஜகவின் எம்.ஆர்.காந்தி பெற்ற வெற்றியால், 10 ஆண்டுகள் அமைச்சர், 20 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் என கோலோச்சிய சுரேஷ்ராஜன் தோல்வியைத் தழுவினார். பாஜகவுக்கு பாடம் புகட்டக் காத்திருந்த சுரேஷ்ராஜன், மாநகராட்சித் தேர்தலை நல்வாய்ப்பாக பயன்படுத்தக் காத்திருக்கிறார். அதன்முதல் அடியையும் எடுத்து வைத்திருப்பதாகச் சிலாகிக்கின்றனர் உடன்பிறப்புகள்.

குமரியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

நாகர்கோவில் மாநகராட்சி என்னும் அந்தஸ்தோடு சந்திக்கும் முதல் தேர்தல் இது! நாகர்கோவில் உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை எப்போதுமே பொன்.ராதாகிருஷ்ணன் கையே ஓங்கி இருக்கும். அவரது பரிபூரண ஆசிபெற்ற மீனாதேவ் இங்கு ஏற்கெனவே இருமுறை நகரசபைத் தலைவராக இருந்தார்.

நாகர்கோவில் பகுதிவாசிகள் மத்தியில் தனித்த செல்வாக்குமிக்க மீனாதேவை முன்னிலைப்படுத்தி, மாநகரத் தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்தது பாஜக. மீனாதேவ் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது கணவர் தேவ் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். நாகர்கோவிலுக்குள் ஆழமாக ஊருடுவியிருக்கும் இந்துத்துவமும் இதனோடு சேரும்போது, மீனாதேவை முன்னிலைப்படுத்துவது கைகொடுக்கும் என பொன்னார் நினைத்தார்.

நாகர்கோவிலில் திமுகவினர் ஒட்டியிருக்கும் போஸ்டர்

கடந்தமுறை நாகர்கோவில் நகரசபைத் தலைவர் பதவி பெண்களுக்கே ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜகவின் கணக்கைப் புரிந்துகொண்ட திமுக, நாகர்கோவில் மேயர் பதவியைப் பொது என மாற்றிவிட்டது. ‘பொது’ என அறிவிக்கப்பட்டால் பெண்களும் மேயர் ஆகலாம்தான். ஆனால், பெண்களுக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்படும்போதுதான் மீனாதேவ் வலுவான வேட்பாளராக இருந்தார்.

‘பொது’ என அறிவித்துவிட்டதால் ஆண்கள் பலரும் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள். திமுகவில் மாநகரச் செயலாளர் மகேஷுக்கு அமைச்சர் மனோதங்கராஜின் பரிபூரண ஆசி இருக்கிறது. முன்னாள் எம்எல்ஏ ராஜனுக்கு சுரேஷ்ராஜனின் ஆசி இருக்கிறது. இதனால் திமுகவைக் குறிவைத்து பாஜகவும், பாஜவைக் குறிவைத்து திமுகவும் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து போஸ்டர் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

நாகர்கோவிலை மாநகராட்சியாக உயர்த்தியதன் பிண்ணனியில் பாஜகவே இருந்தது. நாகர்கோவிலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது, பாஜக வைத்த வேண்டுகோளை ஏற்றே மாநகராட்சியாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போதிருந்தே மீனாதேவும் இந்தப் பதவியை நோக்கி நகர்ந்து வந்தார். இந்நிலையில் ‘பொது’வாக அறிவித்து, பாஜகவின் ‘பிரபலமானவர்’ என்னும் அடையாளத்தை உடைத்து, ரேஸில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது திமுக. இதனால் திமுக, பாஜக இடையே கடும்போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அந்தஸ்து கொடுத்த அதிமுகவோ இதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

x